பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அதிகாரிகள் ஆய்வு


பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 4 Feb 2020 11:00 PM GMT (Updated: 4 Feb 2020 11:15 PM GMT)

பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரும்பாறை,

ஆத்தூர் தாலுகா பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி, கானல்காடு, தடியன்குடிசை, குப்பமாள்பட்டி, கல்லகிணறு, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

பெரும்பாறை அருகே உள்ள தடியன்குடிசையை சுற்றுலாதலமாக மாற்றியதில் இருந்து புல்லாவெளி நீர்வீழ்ச்சியை ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஆனால் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்றுவருவதற்கு முறையான பாதை வசதியோ, தடுப்புசுவரோ கிடையாது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இதுமட்டுமின்றி கழிப்பறை, உடைமாற்றும் அறை உள்ளிட்ட எந்தவொரு வசதிகளும் அங்கு இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் சிரமம் அடைந்துள்ளனர். பாதை வசதி இல்லாததால் தூரத்தில் நின்றபடியே நீர்வீழ்ச்சியின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். எனவே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சிறந்த சுற்றுலாதலமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைக்கருத்தில் கொண்டு ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் ஆத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார், துணைத்தலைவர் சுருளிராஜன், ஊராட்சி செயலர் திருப்பதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story