3 பெண்களை வெட்டிக்கொலை செய்த 2 பேருக்கு சாகும் வரை சிறை சாங்கிலி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

சாங்கிலியில் 3 பெண்களை வெட்டிக்கொலை செய்த 2 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
சாங்கிலி,
சாங்கிலி மாவட்டம் கானாபூர் தாலுகாவில் உள்ள ஹிவ்ரே கிராமத்தை சேர்ந்தவர் பல்வந்த் ஷிண்டே. இவரது மனைவி வித்யாராணி. கடந்த 2009-ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக வித்யாராணி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக வித்யாராணியின் அண்ணன் சுதிர் சதாசிவ் கோர்படே தனது தங்கையின் தற்கொலைக்கு அவரது மாமியார் மற்றும் உறவினர்களின் தூண்டுதலே காரணம் என போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, வித்யராணியின் கணவர் குடும்பத்துக்கு மற்றொரு உறவினர் குடும்பத்தினர் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இது சுதிர் சதாசிவ் கோர்படேக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
3 பெண்கள் வெட்டிக்கொலை
இதனால் தனது தங்கையின் சாவுக்கு பழிவாங்க நினைத்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந்தேதி தனது உறவினரான ரவீந்திர ராமச்சந்திர கதம் என்பவரை அழைத்துக்கொண்டு, தங்கையின் கணவரான பல்வந்த் சிண்டேவின் உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது, வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பிரபாவதி ஷிண்டே, நிஷிகந்தா ஷிண்டே மற்றும் சுனிதா ஷிண்டே ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் 3 பெண்களையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
சாகும் வரை ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுதிர் சதாசிவ் கோர்படே மற்றும் ரவீந்திர ராமச்சந்திர கதம் ஆகியோரை கைது செய்து சாங்கிலி செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இருவருக்கும் எதிராக 21 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 12 வயது சிறுவனின் சாட்சியம் முக்கியமாக கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அப்போது, குற்றவாளிகள் சுதிர் சதாசிவ் கோர்படே மற்றும் ரவீந்திர ராமச்சந்திர கதம் ஆகியோருக்கு சாகும் வரை(வாழ்நாள் முழுவதும்) சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story