உளுந்தூர்பேட்டையில், திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்பட 4 பேர் கைது
சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்பட 4 பேரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கோவிலில் தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதற்கிடையே இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மொழியில் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சி நிறுவனருமான கவுதமன் இந்த கும்பாபிஷேக விழாவுக்கு சென்று தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்வதற்காக தஞ்சை மாவட்ட போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் திரைப்பட இயக்குனர் கவுதமன் சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக செல்ல இருப்பதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு நேற்று தஞ்சை மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகா, சப்-இன்ஸ்பெக்டர் கோபி ஆகியோர் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி காரில் வந்த திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் அவருடன் வந்த மாநில அமைப்பு செயலாளர் ரகுநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் தெய்வத்தமிழ் திருமுறை வழிபாட்டு இயக்கம் மோகனசுந்தரம் சுவாமிகள், அலுவலக உதவியாளர் ராஜ்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது திரைப்பட இயக்குனர் கவுதமன் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அங்கு தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. குறிப்பாக யாக சாலையில் பெயரளவுக்கு மட்டுமே தமிழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனைக்கு உரியது. இதனை ஆய்வு செய்வதற்காக நான் அங்கு சென்று கொண்டிருந்தேன். ஆனால் என்னை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வைத்து போலீசார் கைது செய்து விட்டார்கள் என்றார்.
Related Tags :
Next Story