ஆண்டிப்பட்டி அருகே, விவசாய கழிவுகளுக்கு வைத்த தீயில் கருகிய சாலையோர மரங்கள்
ஆண்டிப்பட்டி அருகே விவசாய கழிவுகளுக்கு வைத்த தீயில் சாலையோர மரங்கள் கருகின.
தேனி,
ஆண்டிப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரம் விலக்கில் இருந்து மரிக்குண்டு கிராமத்துக்கு செல்ல தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். வறட்சியான இந்த பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்து, தண்ணீர் ஊற்றி தொடர்ந்து பராமரித்து வந்தனர்.
இதன் பயனாக மரக்கன்றுகள் உயிர்ப்புடன் வளர்ந்து சாலையோரம் பசுமையாக காட்சி அளித்தது. இப்பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிகம் உள்ள நிலையில், போதிய அளவில் கதிரடிக்கும் களம் இல்லை. இதனால், விளைபொருட்களை சாலையில் கொட்டி கதிரடிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. ஆனாலும், இதற்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.
எம்.சுப்புலாபுரம் விலக்கில் இருந்து மரிக்குண்டு செல்லும் சாலையை, சமீபத்தில் களமாக மாற்றியவர்கள், பயிர் களை பிரித்து எடுத்துவிட்டு விவசாய கழிவுகளை சாலையோரம் குவித்து வைத்தனர். இவ்வாறு குவித்து வைக்கப்பட்ட விவசாய கழிவுகள் சாலைகளில் பறந்து விழுந்தன. இதனால், சிலர் இந்த கழிவுகளுக்கு தீ வைத்துள்ளனர்.
காய்ந்து கிடந்த விவசாய கழிவுகளில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீயால் சாலையோரம் பசுமையாய் இருந்த மரங்கள் கருகின. கடந்த ஆண்டும் அதேபோன்று சாலையோரம் நின்ற சில மரங்கள் கருகின. இந்த ஆண்டும் அதே நிலைமை தொடர்கதையாகி உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் அதே நேரத்தில், புதிதாக மரக்கன்றுகள் நடப்படுவது இல்லை. தன்னார்வலர்கள் நடவு செய்த மரங்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை உருவாகி உள்ளது.
எனவே, இதுபோன்று சாலைகளை களமாக மாற்றுவதை தடுக்கவும், விவசாய கழிவுகளை சாலையோரம் கொட்டி தீ வைப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story