கொரோனா வைரஸ் அறிகுறி: டிரைவரிடம் மீண்டும் ரத்த மாதிரி சேகரிப்பு - திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிரைவரிடம் ரத்த மாதிரி மீண்டும் சேகரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி,
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் சம்பவத்தால் இந்தியாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விமானநிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி விமானநிலையத்திலும் மருத்துவ குழுவினர் பயணிகளை பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கடந்த 2-ந் தேதி திருச்சி வந்த விமானத்தில் வந்திறங்கிய மதுரை கொட்டாம்பட்டியை சேர்ந்த தவமணியின் மகன் அருணை (வயது 27) மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் டிரைவராக பணியாற்றி வந்த அருணுக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் இருந்ததால் அவரது ரத்தம், சளி மாதிரியை புனேவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த மாதிரியில் சரியான முடிவு கிடைக்கவில்லை.
இதனால் அருணிடம் மீண்டும் ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. அதனை சென்னையில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை ஆய்வுக்கூடத்திற்கு நேற்று அனுப்பி வைத்தனர். இந்த மாதிரியை பரிசோதனை செய்த பின் முடிவு நாளை (வியாழக்கிழமை) தெரியவரும் என டீன் வனிதா தெரிவித்தார்.
டிரைவர் அருண், நாளை நடைபெற உள்ள தனது தங்கையின் திருமணத்திற்காக சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்துள்ளார். அருணை வீட்டிற்கு அழைத்து செல்ல அனுமதிக்குமாறு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அவரது உடல் நலம் நல்ல நிலையில் இருந்தாலும், ரத்தம், சளி மாதிரிகளை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என தெரியவந்தால் மட்டுமே அவரை சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்ப முடியும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தங்கையின் திருமணத்தை நல்ல முறையில் நடத்துமாறும், அதனை வாட்ஸ்-அப் மூலமாக பார்த்து கொள்வதாக தனது பெற்றோரிடம் அருண் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story