ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. காலையில் சுவாமி நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 9-ம் நாளான வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
10-ம் நாளான 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமி பொலிந்துநின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 11-ம் நாளான 15-ந்தேதி (சனிக்கிழமை) இரவில் சுவாமி நம்மாழ்வார், ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
12-ம் நாளான 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாற்றுமுறைக்கு பின்னர் சுவாமி இரவில் ஆழ்வார்திருநகரிக்கு பல்லக்கில் திரும்புகிறார்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பொன்னி, தக்கார் கணேசகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story