கோவில் கொடை விழா விவகாரம்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் திடீர் முற்றுகை


கோவில் கொடை விழா விவகாரம்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 6 Feb 2020 3:30 AM IST (Updated: 6 Feb 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

கோவில் கொடை விழா விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டனர்.

நெல்லை,

நெல்லை பேட்டை ஆண்டாள்புரம், உடையவர்தெரு, ராம்நகர் தெரு, கலுங்கடி தெருவை சேர்ந்த பொதுமக்கள், டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் மாலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

பேட்டை கொம்புமாடசாமி கோவில் எங்களது முன்னோர் காலத்தில் இருந்து மலையாளமேடு, ஆஞ்சநேயர் தெரு, ஆண்டாள்புரம் தெரு, ராம்நகர் தெரு, உடையவர் தெரு, கலுங்கடி தெரு ஆகிய 6 ஊர் பகுதி பொது மக்களால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2 ஊர் மக்கள் பிடிமண் எடுத்து சென்று தனியாக கோவிலை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து 4 ஊர் மக்கள் கோவிலில் ஆண்டுதோறும் கொடை விழா நடத்தி வந்தோம். இந்த நிலையில் ஒரு ஊரை சேர்ந்த சிலர் தங்களுக்கு மட்டுமே இந்த கோவில் பாத்தியப்பட்டது என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் கோவிலை பூட்ட முயற்சி நடக்கிறது. இதை தடுத்து நிறுத்தி அனைத்து மக்களும் சேர்ந்து விழா, பூஜை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உடையவர்தெருவை சேர்ந்த மற்றொரு தரப்பு கிராமமக்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் நுழைவு வாயிலை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அவர்கள், கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், “பேட்டை கொம்புமாடசாமி கோவிலை எங்கள் குடும்பத்தினர் ஆறு தலைமுறையாக வணங்கி வருகிறோம். எங்கள் குலதெய்வ கோவிலின் பூட்டை சிலர் உடைத்து, அத்துமீறி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story