கோவையில், 100 கிலோ கலப்பட நெய் பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கோவையில் 100 கிலோ கலப்பட நெய்யை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை,
கோவை மாநகர பகுதிகளில் கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் கோவை மாநகரம், சுண்டகாமுத்தூர் ரோடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 100 கிலோ கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:-
கோவை குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வெண்ணெய், பாமாயில் மற்றும் வனஸ்பதி கலந்து கலப்பட நெய் தயாரித்து உள்ளனர். பின்னர் இந்த கலப்பட நெய், டப்பாக்களில் அடைக்கப்பட்டு, கோவை மாநகர பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது. ஹம்சா (வயது 32), ஈஸ்வரி (49), ராஜாமணி(40), கலா (30), மனிஷ்கா (32), அழகுபாண்டி (30), ராஜேஸ்வரி (65), முத்துராக்கு (50) ஆகிய 8 பேர் கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்வது கண்டறிப்பட்டது. அவர்களிடம் இருந்து 100 கிலோ கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்ட உள்ளது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.
மேற்கண்ட நபர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவுகள் 55 மற்றும் 58-ன் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ நெய், வெள்ளலூரில் உள்ள கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் பயோ கியாஸ் ஆலைக்கு மூலப்பொருளாக வழங்கி அழிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story