அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் வழங்காததால் காளைகளுடன் மறியல்


அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் வழங்காததால் காளைகளுடன் மறியல்
x
தினத்தந்தி 6 Feb 2020 4:15 AM IST (Updated: 6 Feb 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் வழங்காததால் காளைகளுடன் அதன் உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு வருகிற 16-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்க உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த 2 நாட்களாக, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளன. இந்த காளைகளை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்று வருகின்றனர்.

இந்தநிலையில் காளைகளின் உரிமையாளர்கள், டோக்கன் கேட்டு கடந்த 2 நாட்களாக அலைந்து வருகின்றனர். ஆனால் 10 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடியும் என்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மீதமுள்ள 50 காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உள்ளூர் காளைகளை போட்டியில் பங்கேற்க விடாமல் தடுக்கும் முயற்சி நடப்பதாக காளை வளர்ப்போர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் 2 பேருக்கு 250 டோக்கன்கள் வரை வழங்கி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் காளை வளர்ப்போர் ஆத்திரம் அடைந்தனர்.

உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வெளியூர் காளைகள் பங்கேற்க டோக்கன் வழங்கியதை கண்டித்துள்ளனர். இதனையடுத்து 10-க்கும் மேற்பட்ட காளைகளை, திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் காளைகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் நடந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. இதனையடுத்து அங்கு நின்றிருந்த போலீசார், ஆம்புலன்ஸ் செல்ல வழியை ஒதுக்கி கொடுத்தனர்.

அதன்பிறகு மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காளை வளர்ப்போருக்கு டோக்கன் வாங்கி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து காளை வளர்ப்போர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் சின்னமனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story