மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கு நெல்லையில் ரூ.4.34 கோடியில் புதிய கட்டிடம் - கலெக்டர் ஷில்பா அடிக்கல் நாட்டினார்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கு நெல்லையில் ரூ.4.34 கோடியில் புதிய கட்டிடம் - கலெக்டர் ஷில்பா அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 6 Feb 2020 3:31 AM GMT (Updated: 6 Feb 2020 3:31 AM GMT)

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கு நெல்லையில் ரூ.4.34 கோடியில் புதிய கட்டிடத்திற்கு கலெக்டர் ஷில்பா அடிக்கல் நாட்டினார்.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவைகள் இங்கு தான் வைக்கப்பட்டு இருக்கின்றன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்காக தனியாக கட்டிடம் கட்ட வேண்டும் என அரசு முடிவு செய்தது. அதன்படி நெல்லை தாலுகா அலுவலக வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ரூ.4 கோடியே 34 லட்சத்து 50 ஆயிரம் திட்டமதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் கலெக்டர் ஷில்பா நேற்று நாட்டினார்.

அப்போது அவர் கூறும் போது, “பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு சீட்டுடன் சரிபார்ப்பு எந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பாக இருப்பு வைக்க நெல்லை தாலுகா அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.

இந்த கட்டிடம் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படுகிறது. ஓராண்டுக்குள் கட்டி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன் பிறகு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை உதவி கலெக்டர் மணிஸ் நாரணவரே, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவி, உதவி செயற்பொறியாளர் மெகர்பானு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், நெல்லை தாசில்தார் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story