உயர்அழுத்த மின்கம்பிகள் செல்வதற்கு எதிர்ப்பு: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


உயர்அழுத்த மின்கம்பிகள் செல்வதற்கு எதிர்ப்பு: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2020 4:15 AM IST (Updated: 6 Feb 2020 9:03 AM IST)
t-max-icont-min-icon

பழனிசெட்டிபட்டியில் உயர்அழுத்த மின்கம்பிகளை பணிமனைக்கு மேல் பகுதியில் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணைமின் நிலையம் வழியாக லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு உயர் அழுத்த மின்கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. துணை மின் நிலையம் அமைந்துள்ள முத்துநகர் வழியாக பல ஆண்டுகளாக மின்கம்பிகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு குடியிருப்புகள் பெருகிய நிலையில், உயர்அழுத்த மின்கம்பிகள் கொண்டு செல்வதற்கான மாற்றுப்பாதை திட்டமிடப்பட்டது.

அதன்படி, பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மேல் பகுதியில் கொண்டு செல்வதற்காக, முத்துநகரில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இதற்கு பணிமனையில் இருந்து ஆட்சேபனை எழுந்தது. இதனால் மீண்டும் குடியிருப்புகள் அமைந்துள்ள முத்துநகர் வழியாக உயர் அழுத்த மின் கம்பிகளை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மேலும் போராட்டம் நடத்திய மக்கள், ஏற்கனவே திட்டமிட்டபடி போக்குவரத்து கழக பணிமனையின் ஓரமாக உயர் அழுத்த மின்கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற வலியுறுத்தினர்.

இந்நிலையில், பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிமனை வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் கொண்டு செல்லக்கூடாது என்றும், அவ்வாறு கொண்டு சென்றால் நிறுத்தப்படும் பஸ்களுக்கும், அங்குள்ள டீசல் கிடங்குக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து விட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story