மேலவளவு கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான நிபந்தனையை மாற்ற மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
மேலவளவு கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான நிபந்தனைகளை மாற்றி உத்தரவிட மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
மதுரை,
கடந்த 1997-ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உள்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வந்த 13 குற்றவாளிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு முன்கூட்டியே விடுவித்து அரசாணை பிறப்பித்தது. அவர்களை முன்கூட்டியே விடுவித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட்டு, 13 பேரும் மேலவளவு கிராமத்துக்குள் நுழைய தடை விதித்தும், வேலூரில் தங்கி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு கடிதம் மூலம் கேட்டு இருந்தார். அந்த கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஸ்குமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலூரில் தங்கியுள்ளவர்களை திண்டுக்கல், சிவகங்கை மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும். குற்றவாளிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், நீண்ட தூரத்தில் தங்கியிருப்பதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, இந்த நிபந்தனையை மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், நிபந்தனையை மாற்றுவதற்கு நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இதேபோல, இந்த வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது தவறு என்பதற்கு சட்ட ரீதியிலான முகாந்திரம் உள்ளதா? இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட வேண்டியதன் அவசியம் என்ன (லோக்கஸ் ஸ்டேண்டி) என்பது குறித்து மட்டும் மனுதாரர் மற்றும் குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் வாதம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story