போலீஸ் அதிகாரிகளுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்: குமரி கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை


போலீஸ் அதிகாரிகளுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்: குமரி கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 7 Feb 2020 4:00 AM IST (Updated: 6 Feb 2020 6:16 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் அதிகாரிகளுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குமரி கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. 48 கடற்கரை கிராமங்களிலும் தீவிர ரோந்து பணி நடந்தது.

கன்னியாகுமரி, 

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும் கன்னியாகுமரி கடலில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

தற்போது பயங்கரவாதிகள் போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையொட்டி தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி கடலிலும் தீவிர ரோந்து பணி நடந்தது. அதாவது, கன்னியாகுமரியில் நேற்று காலை 6 மணி முதல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ‘சாகர் கவாஜ்‘ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இதற்காக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 2 அதிநவீன ரோந்து படகுகள் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இதில் ஒரு படகு சின்னமுட்டத்தில் இருந்து கூடங்குளம் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த படகில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில், சப்–இன்ஸ்பெக்டர் டென்னிஸ் மற்றும் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள். மற்றொரு படகு சின்னமுட்டத்தில் இருந்து நீரோடி வரை மேற்கு கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த படகில் சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி, மணிகண்டன் மற்றும் போலீசார் பணியில் உள்ளனர். மேலும் கடலில் மீன்பிடித்து வரும் விசைப்படகுகள், வள்ளங்கள் போன்றவற்றிலும் இவர்கள் சோதனை நடத்தினர். மீனவர்களிடம் அடையாள அட்டை இருக்கிறதா? என சோதனையும் நடத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் 48 கடற்கரை கிராமங்களில் 72 கிலோ மீட்டர் தூரம் ரோந்து பணி நடந்து வருகிறது. கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன வாகனம் மூலமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான சோதனை சாவடிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சின்னமுட்டம், மாதவபுரம், மகாதானபுரம், தேங்காப்பட்டணம், குளச்சல், முட்டம், உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி ஆகிய சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை இன்றும் நடைபெற உள்ளது.

Next Story