சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் பால் வண்டியில் மணல் கடத்தல் வாலிபர் கைது


சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் பால் வண்டியில் மணல் கடத்தல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2020 4:00 AM IST (Updated: 7 Feb 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணையாற்றில் பால் வண்டியில் நூதன முறையில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

புதுவை மாநிலத்தில் ஓடும் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி மாட்டுவண்டிகள், லாரிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார், வருவாய் துறை அதிகாாிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும் ஆற்றில் இருந்து சாக்குப்பைகளில் மணலை நிரப்பி மோட்டார் சைக்கிளில் கடத்திக் கொண்டு வந்து காட்டுப் பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள்.

இந்த நிலையில் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன் தினம் இரவு மணல் கடத்துவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், போலீசார் அன்பழகன், வீரப்பன் ஆகியோர் சாதாரண உடையில் தென்பெண்ணையாற்றில் கண்காணிப்பு பணியில் மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் வேனில் பால் பாக்கெட்டுகள் இருப்பதாக தெரிவித்தார்.

ஆனாலும் சந்தேகமடைந்து வேனை போலீசார் திறந்து பார்த்தபோது சுமார் 100-க்கும் மேற்பட்ட சாக்குப் பைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது ஆற்று மணல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து போலீசார் வேனையும், மணல் சாக்குப் பைகளையும் பறிமுதல் செய்து டிரைவரை பிடித்து பாகூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குருவிநத்தம் பாரதி நகரைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 26) என்பதும் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் நூதன முறையில் மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ராஜேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story