சிங்காநல்லூர் தடுப்பணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு


சிங்காநல்லூர் தடுப்பணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2020 11:00 PM GMT (Updated: 6 Feb 2020 8:03 PM GMT)

சிங்காநல்லூர் தடுப்பணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கோவை,

கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் நொய்யல் ஆறு மத்வராயபுரம், ஆலாந்துறை, பேரூர், கோவை, சிங்காநல்லூர், பட்டணம், ராவத்தூர் பிரிவு வழியாக திருப்பூர் மாவட்டத்துக்குள் சென்று பின்னர் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே சித்திரைச்சாவடி, தண்ணீர் பந்தல், குறிச்சி, குனியமுத்தூர், சுண்ணாம்பு காளவாய், சிங்காநல்லூர், ஒட்டர்பாளையம், பட்டணம், ராவத்தூர் உள்பட ஏராளமான தடுப்பணைகள் உள்ளன. இந்த தடுப்பணைகள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மீன்கள் செத்து மிதந்தன

தெளிந்த நீரோடை போன்று தண்ணீர் சென்ற இந்த ஆற்றில் தற்போது சாக்கடை கழிவுநீர்தான் அதிகளவில் செல்கிறது. மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் ஓடும் நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள சிங்காநல்லூர் தடுப்பணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.

இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தடுப்பணையில் மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சாயக்கழிவுநீர்

நொய்யல் ஆற்றில் உள்ள சிங்காநல்லூர் தடுப்பணையில் இருந்து சிங்காநல்லூர் குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த குளக்கரையில்தான் 450-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள் இரவு நேரத்தில் சாயக்கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலந்துவிடுகிறார்கள். இதனால்தான் இந்த தடுப்பணையில் மீன்கள் செத்து மிதந்து உள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை

இதன் காரணமாக தடுப்பணை அருகில் செல்ல முடியாத அளவுக்கு அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் அங்கு செத்து மிதக்கும் மீன்களை அங்கிருந்து அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அங்கு செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, தண்ணீர் மாறுபடும்போதோ அல்லது வெப்பம் அதிகமாக இருந்தாலோ இதுபோன்று மீன்கள் செத்து மிதக்கும். நொய்யல் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Next Story