குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான பேச்சு: நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்கிறோம் முரளிதரராவ் பேட்டி


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான பேச்சு: நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்கிறோம் முரளிதரராவ் பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2020 4:45 AM IST (Updated: 7 Feb 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்கிறோம் என்று பா.ஜனதா தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

கோவை,

தமிழக விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 96-வது பிறந்தநாளையொட்டி கோவை கொண்டையம்பாளையம் அருகே வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு நாராயணசாமி நாயுடு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அதி.மு.க. சார்பில் கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நிர்வாகிகள் நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நாராயணசாமி, வெங்கடே‌‌ஷ், தண்டபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வருமானம் இரட்டிப்பு

அதனைத்தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன், சி.பி.ராதாகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் நாராயணசாமி நாயுடுவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வங்கி கடன் அளித்து வருகிறது. விவசாயிகளுக்கான அரசாக மத்திய அரசு விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில விவசாய அணி தலைவர் பொன் விஜயராகவன், ஜி.கே.நாகராஜ், மாவட்ட தலைவர் ஜெகநாதன், ஒன்றிய தலைவர் கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டபாணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வரவேற்பு

நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளையொட்டி மணிமண்டபத்திற்கு மரியாதை செலுத்த வந்த அனைவரையும் நாராயணசாமி நாயுடுவின் பேரனும், பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளருமான பிரபு மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரவேற்றனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளகோவை வந்த முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அழிக்க நினைத்தது இல்லை

ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைப்பது தொடர்பான பிரதமர் மோடி அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதனால் ஒட்டு மொத்த இந்தியர், உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்.

அனைத்து இந்திய மொழிகளும் கடவுளிடம் செல்லும் வழியாகதான் இருக்கிறது. அதில் தமிழ், சமஸ்கிருதம் என்று பிரித்து பார்க்க வேண்டாம். அனைத்து மொழிகளையும் பா.ஜனதா சரிசமமாகதான் பார்க்கிறது. ஒரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, மற்றொரு மொழியை அழிக்க நினைத்தது இல்லை.

மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால் நமது நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து சட்டவிரோதமாக குடியிருந்து வருபவர்களுக்கு தான் பாதிப்பு. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நமது நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்காக போராடவில்லை. அவர் பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுகிறார். அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளித்து உள்ளதை வரவேற்கிறோம். நாட்டில் பொருளாதார மந்தநிலை பலமுறை வந்து உள்ளது. தற்போது ஏற்பட்டு உள்ள நிலமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடந்த பிறகு தமிழகத்துக்கு பா.ஜனதா தலைவர் அறிவிக்கப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story