ஈரோட்டில், ஜவுளி உற்பத்தியாளர்களின் கடைகள், குடோன், வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை


ஈரோட்டில், ஜவுளி உற்பத்தியாளர்களின் கடைகள், குடோன், வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 7 Feb 2020 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், ஜவுளி உற்பத்தியாளர்களின் கடைகள், குடோன் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

ஈரோடு,

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீராஜகணபதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஜவுளி உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. எஸ்.ஆர்.எஸ். என்ற பெயரில் லுங்கிகள் உற்பத்தி செய்து மொத்த வியாபாரத்தில் இதன் உரிமையாளர்கள் செய்து வருகிறார்கள். ஈரோடு ஈஸ்வரன் வீதி, வெங்கடாசல வீதி, சொக்கநாத வீதி ஆகிய 3 இடங்களில் மொத்த வியாபார கடைகள் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் ஈரோட்டை சேர்ந்த பாஸ்கர்பாபு, பிரபாகரன், தினேஷ் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். பாஸ்கர்பாபுவும் பிரபாகரனும் சகோதரர்கள், தினேஷ் நெருங்கிய உறவினர்.

இவர்கள் 3 பேரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக கடைகளை நடத்தி வருகிறார்கள். 3 பேரின் கடைகளும் எஸ்.ஆர்.எஸ். என்ற பெயரிலேயே இயங்கி வந்தன. உற்பத்தி செய்யப்படும் லுங்கி உள்பட அனைத்து ஐவுளி பொருட்களும் எஸ்.ஆர்.எஸ்.என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சோதனை

இதுமட்டுமின்றி, பிரபல லுங்கி நிறுவனங்கள், உள்ளாடை நிறுவனங்கள் உள்ளிட்ட ஜவுளி நிறுவனங்களுக்கும் அந்தந்த நிறுவனத்தின் தனித்துவமான ‘பிராண்ட்’ பெயரில் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் ஈரோடு ஈஸ்வரன்கோவில் வீதி, சொக்கநாத வீதி, வெங்கடாசல வீதிகளில் உள்ள கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து இறங்கி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் நிறுவன உரிமையாளர்களின் வீடுகள், குடோன்களிலும் சோதனை நடந்தது. சேலத்தில் இருந்து கார்களில் வந்த 35-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது கடைகள் மற்றும் குடோன்களில் வேலையில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் எந்த பாதிப்பும் இன்றி பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஒரே ஒரு கடை மட்டும் ஷட்டர் பாதி அளவு இறக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைகளில் இருந்த யாரும் வெளி நபர்களுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படவில்லை. வருமானவரித்துறை அதிகாரிகள் அனைவரையும் கண்காணித்தபடி இருந்தனர். பணியாளர்கள் வழக்கமாக வேலை, உணவு நேரத்தில் சாப்பாடு என்று அவர்களின் பணியில் ஈடுபட எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

வரி மோசடி?

2018-ம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி தாக்கல் செய்ததில் மோசடி உள்ளதா? வருமான வரி முறையாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்தன.

இதுதொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தனவா? என்பது பற்றி எந்த கருத்தையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தெரிகிறது. நேற்று இரவு வரை தொடர்ந்து சோதனை நடந்து வந்தது. சோதனை முடிந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.

Next Story