சாத்தனூர் அணை தண்ணீர் மூங்கில்துறைப்பட்டுக்கு வந்தது விவசாயிகள் மகிழ்ச்சி


சாத்தனூர் அணை தண்ணீர் மூங்கில்துறைப்பட்டுக்கு வந்தது விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 7 Feb 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

சாத்தனூர் அணையில்இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூங்கில்துறைப்பட்டுக்கு வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் திறந்துவிடும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 12 ஆயிரத்து 543 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் மூங்கில்துறைப்பட்டு பகுதிக்குட்பட்ட 48 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.

இந்த நிலையில் சாத்தனூர் அணை பாசன விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலது புற கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மூங்கில்துறைப்பட்டுக்கு வந்தது

இந்த அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வலது புற பிரதான கால்வாய் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியை வந்தடைந்தது. இதனால் மூங்கில்துறைப்பட்டு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சாத்தனூர் அணை பாசன விவசாயிகள் கூறுகையில், சாத்தனூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பிரதான கால்வாய் வழியாக மூங்கில்துறைப்பட்டு பகுதியை வந்தடைந்தது. மேலும் இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள் மூலம் 48 ஏரிகளுக்கு செல்லும்.

தற்போது பிரதான கால்வாயில் பல இடங்களில் குப்பைகள் சூழ்ந்து தண்ணீர் செல்ல இடையூறாக உள்ளது. மேலும் ஏரிகளுக்கு செல்லும் கிளை வாய்க்கால்களும் பல இடங்களில் தூர்வாரப்படாமல் தூர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து 35 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளால் சூழ்ந்துள்ள பிரதான கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வாரி ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story