உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி: விவசாயிகள் தர்ணா போராட்டம்


உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி: விவசாயிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 7 Feb 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம் அருகே உயர்மின்கோபுரம் அமைக்க நிலஅளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் கையகப்படுத்திய நிலத்துக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

மங்கலம்,

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மங்கலத்தை அடுத்த ஊஞ்சப்பாளையம்,நடுவேலம்பாளையம்,பள்ளிபாளையம், வலையபாளையம் பகுதிகளில் உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகளின் நிலங்களில் அளவீடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் பவர்கிரிட் நிறுவன அதிகாரிகளிடம் சந்தை மதிப்பில் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதன்பிறகே விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மங்கலத்தை அடுத்த பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையம் பகுதியில் வேலுச்சாமி (வயது 50) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணிகளை மேற்கொள்ள பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பவர்கிரிட் அதிகாரிகள்,வருவாய்த்துறையினர் நில அளவீடு பணிக்கு வந்தனர்.

விவசாயிகள் தர்ணா

இது பற்றி தகவல் அறிந்த வலையபாளையம், செம்மிபாளையம்,ஊஞ்சப்பாளையம்,பள்ளிபாளையம்,நடுவேலம்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வலையபாளையத்தில் திரண்டனர்.பின்னர் விவசாயிகள் பவர்கிரிட் அதிகாரிகளிடம்"நில சந்தை மதிப்பில் விவசாயிகளுக்கு நில இழப்பீடு வழங்க வேண்டும் "எனக் கூறி அளவீடு செய்ய வந்த நிலத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தர்ணா போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது வருவாய்த்துறையினர் விவசாயிகளிடம் பூமலூர் பகுதியில் உயர்மின்கோபுரம் அமையவுள்ள நிலங்களுக்கான இழப்பீடு தொகை குறிப்பிடப்பட்ட பட்டியலை வழங்கினர். மேலும் விவசாயிகள் எதிர்பார்க்கும் உரிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன்பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.பின்னர் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக நில அளவீடு பணிகள் நடைபெற்றது.

போலீசில் புகார்

இதற்கிடையே பவர்கிரிட் அதிகாரிகள், பணிகளை தடுத்து நிறுத்தியதாக பரமசிவம்பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி(39) என்பவர் மீது போலீசில் புகார் செய்தனர். போலீசார் வேலுச்சாமியை மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவரை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story