திருச்செந்தூரில் பொதுமக்கள் திடீர் மறியல் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரிக்கை


திருச்செந்தூரில் பொதுமக்கள் திடீர் மறியல் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரிக்கை
x
தினத்தந்தி 7 Feb 2020 3:19 AM IST (Updated: 7 Feb 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, திருச்செந்தூரில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கோவில் பஸ்நிலையத்துக்கு செல்லும் வழியில் சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியார் விடுதி கட்டப்பட்டு வருகிறது. அதன் வளாகத்தில் கட்டண கழிப்பறை செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குவதால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதையடுத்து சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஊர் தலைவர் முருகன் தலைமையில் நேற்று அந்த தனியார் விடுதி அருகில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் வாகனங்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

உடனே திருச்செந்தூர் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுவாமி, பாலசுப்பிரமணியன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு தேங்கிய கழிவுநீரை உடனே அகற்றுவதாகவும், மீண்டும் கழிவுநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, அந்த வழியாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது கோவில் பஸ் நிலையத்துக்கு பஸ்கள் செல்லாததால், தேரடி திடலில் பயணிகள் இறங்கி, கோவிலுக்கு நடந்து சென்றனர்.

Next Story