கடலோர கிராமங்களில் ஒத்திகை: கடல் வழியாக தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 9 பேர் பிடிபட்டனர்


கடலோர கிராமங்களில் ஒத்திகை: கடல் வழியாக தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 9 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 7 Feb 2020 4:00 AM IST (Updated: 7 Feb 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

கடலோர கிராமங்களில் நடைபெற்ற ஒத்திகையின்போது கடல் வழியாக தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 9 பேரை போலீசார் பிடித்தனர்.

கடலூர் முதுநகர்,

கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பையில் ஊடுருவி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு அவ்வப்போது கடலோர பகுதியில் கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வரு கின்றனர்.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டனர். இவர்கள் அதிநவீன படகில் கடலில் சென்று தீவிரமாக கண்காணித்தனர். இந்த ஒத்திகையில், பாதுகாப்பு படைவீரர்கள் தீவிரவாதிகள் போல் ஊடுருவுவார்கள். அவர்களை கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் பிடிக்கிறார்களா?, இல்லையா? என்பதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும். கடலூர் துறைமுகம் அருகே கடல் வழியாக படகு மூலம் சித்திரைப்பேட்டை மீனவ கிராமத்துக்குள் ஊடுருவிய 6 பேரை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதேபோல் படகு மூலம் கடல் வழியாக நல்லவாடு மீனவ கிராமத்தில் நுழைந்த 3 பேரை கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் பிடித்தனர். மேலும் பிடிபட்டவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story