விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை: முக்கிய குற்றவாளி அசார் திருச்சி கோர்ட்டில் சரண்
விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி அசார், திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மேலாளராக சீனிவாசன்(வயது55) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பனப்பாக்கத்தை சேர்ந்தவர். கடந்த 4-ந்தேதி இவர் பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்த போது, கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடிகள், வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி அவரை படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.
இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை நடந்த பெட்ரோல் பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் கொலையாளி, விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியை சேர்ந்த பிரபல ரவுடி அசார் என்ற அன்சாருதீன்(30) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
கடந்த 2018-ம் ஆண்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரகாசிடம், ரவுடி அசார் பணம் கேட்டு கொடுக்காததால் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் கடந்த 4-ந்தேதி பிரகாசை கொலை செய்வதற்காக பெட்ரோல் பங்குக்கு தனது கூட்டாளிகளுடன் சென்ற அசார், ஆள் மாறாட்டத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் சீனிவாசனை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அசார் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தன்னை நெருங்கி விட்டதை அறிந்த அசார் நேற்று திருச்சி 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு குமார் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அசார் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
Related Tags :
Next Story