ஜோலார்பேட்டை அருகே நடந்த சம்பவத்தில் திருப்பம் ; குடிநீர் தொட்டி ஆபரேட்டரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி
மது குடித்து விட்டு தொல்லை கொடுத்ததாலும், மைத்துனரின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாலும் குடிநீர் தொட்டி ஆபரேட்டரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் ரமேஷ்குமார் (வயது 34), ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த 4–ந் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை பின்புறம் தலையில் காயம் அடைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து அவரது மனைவி நித்யா கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லோகநாதன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தார். அதில் புகார் செய்த அவரது மனைவி நித்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக கூறினார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
ரமேஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஊதாரித்தனமாக செலவு செய்து வந்தார். இதனால் அவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். நித்யாவின் தம்பி அரவிந்தனின் (30), மனைவியிடம் ரமேஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நித்யா மற்றும் அவரது தம்பி அரவிந்தன் ஆகியோர் விரக்தியில் இருந்தனர். அரவிந்தனின் நண்பரான கணபதி திருப்பத்தூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். அவரிடம் நித்யா மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் சித்தாள் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அப்போது கணபதிக்கும் நித்யாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நித்யா, அவரது கள்ளக்காதலன் கணபதி, தம்பி அரவிந்தன் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷ்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுவில் விஷம் கலந்து கொடுத்து குடிக்க செய்தனர். அதனை குடித்த ரமேஷ்குமார் மயங்கினார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் அவர் உயிர் பிழைத்தார்.
அதன்பின் ரமேஷ் மீண்டும் குடித்துவிட்டு மனைவிக்கும் மைத்துனரின் மனைவிக்கும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த நித்யா மற்றும் அவருடைய தம்பி அரவிந்தன், நித்யாவின் கள்ளக்காதலன் கணபதி ஆகிய மூவரும் சேர்ந்து ரமேஷ்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி அரவிந்தனின் செல்போனை வாங்கிய கணபதி அவரை மது அருந்த வரும்படி அழைத்துள்ளார்.
அதனை ஏற்று ரமேஷ்குமார் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவரை தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கணபதியும் அரவிந்தனும் அழைத்துச்சென்று அங்கு மதுபாட்டில்களை வாங்கினர். பின்னர் ஏரிக்கு சென்று மதுவில் மீண்டும் விஷத்தை கலந்து ரமேஷ்குமாருக்கு குடிப்பதற்காக கணபதி கொடுத்துள்ளார். அதனை குடித்த ரமேஷ்குமாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அருகே இருந்த கல்லை எடுத்து ரமேஷ்குமார் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டார். கொலை நடந்தபோது அரவிந்தன் சற்று ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
மேற்கண்ட தகவல் நித்யாவிடம் விசாரித்தபோது தெரியவந்தது. இதனையடுத்து நித்யா, அவரது தம்பி அரவிந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் கணபதி தலைமறைவாகிவிட்டார். அவரை போலிசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story