பூதலிங்கசாமி கோவிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு


பூதலிங்கசாமி கோவிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Feb 2020 9:30 PM GMT (Updated: 7 Feb 2020 2:09 PM GMT)

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூதப்பாண்டி, 

பூதப்பாண்டி பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவிலில் தைத்திருவிழா கடந்த 30–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9–ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு விநாயகர், சாமி, அம்பாளை தேரில் எழுந்தருள செய்தனர். அதைத்தொடர்ந்து 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 

ஆஸ்டின் எம்.எல்.ஏ. இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி ஆகியோர் தேர் வடத்தை பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இதில் தோவாளை தாசில்தார் ராஜலெட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர் பாக்கியலெட்சுமி, பூதப்பாண்டி பேரூர் தி.மு.க. செயலாளர் ஆலிவர்தாஸ், திருப்பணி மன்ற தலைவர் ராஜேந்திரன், செயலாளர் செல்வகுமார், பொதுச்செயலாளர் பாண்டியன், பொருளாளர் வேலப்பன், மாவட்ட பா.ஜனதா கட்சி தொழில் பிரிவு துணைத்தலைவர் ரெங்கநாதன், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் நாராயண மூர்த்தி, பேரூர் பொதுச்செயலாளர் நாகராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

10–ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்ரீகாரியம் சேதுராம் மற்றும் கோவில் ஊழியர்கள், திருப்பணி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Next Story