வளர்ப்பு மகனை கொன்ற கேட்டரிங் ஊழியருக்கு ஆயுள் தண்டனை வசாய் கோர்ட்டு தீர்ப்பு


வளர்ப்பு மகனை கொன்ற கேட்டரிங் ஊழியருக்கு ஆயுள் தண்டனை   வசாய் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Feb 2020 4:00 AM IST (Updated: 8 Feb 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

4 வயது வளர்ப்பு மகனை கொலை செய்த கேட்டரிங் ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து வசாய் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வசாய்,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கு சந்தோஷ் புவன் பகுதியை சேர்ந்தவர் விகாஸ் ஜெய்ஸ்வால். கேட்டரிங் ஊழியரான இவரது மனைவி உயிரிழந்துவிட்டார். இதனால் பூஜா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கணவரால் கைவிடப்பட்ட பூஜாவிற்கு பியூஷ் (வயது4) உள்பட 3 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் விகாஸ் ஜெய்ஸ்வாலுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் சிறு பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் வளர்ப்பு மகன்களிடம் பக்கத்து வீட்டை சேர்ந்தவரிடம் பேசக் கூடாது என கட்டுப்பாடு விதித்து இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவனுடன் பியூஷ் விளையாடி உள்ளான்.

தன்ணீரில் அமுக்கி கொலை

இது விகாஸ் ஜெய்ஸ்வாலுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் வளர்ப்பு மகன் பியூசை பிடித்து வீட்டிற்குள் தரதரவென இழுத்துச்சென்று வாளியில் நிரம்பி இருந்த தண்ணீரில் தலையை அமுக்கி மூழ்கடித்தார். இதில் சிறுவன் பியூஷ் மூச்சுத்திணறி மயங்கினான். இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் வெளியே சென்றிருந்த பூஜா வீட்டிற்கு வந்தார்.

அப்போது, மகன் மயங்கிக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பியூசை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நடத்திய பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

ஆயுள் தண்டனை

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் விகாஸ் ஜெய்ஸ்வால் சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விகாஸ் ஜெய்ஸ்வாலை கைது செய்தனர். மேலும் அவர் மீது வசாய் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், வளர்ப்பு மகனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த விகாஸ் ஜெய்ஸ்வாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Next Story