சீனாவில் இருந்து குமரி வந்த 4 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை
சீனாவில் இருந்து குமரி வந்த 4 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சென்னையில் இருந்து மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தது.
நாகர்கோவில்,
சீனாவில் ஹூபெய் மாகாணம் உகான் நகரைச் சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் நோயால் நேற்று முன்தினம் மட்டும் 86 பேர் இறந்துள்ளனர். இதுவரை 722 பேர் இறந்துள்ளனர்.
மேலும் சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பும் பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் சீனாவில் இருந்து இந்தியா திரும்புபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சீனாவில் இருந்து குமரி மாவட்டம் திரும்பிய மருத்துவ மாணவ– மாணவிகள் உள்பட 20 பேர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
அவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து வந்த திருவட்டார் பகுதியைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு ரத்த மாதிரி மற்றும் சளி மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 4 மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை அறிக்கை குமரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வந்து சேர்ந்தது. அதில் 4 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் அந்த மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மாணவர்கள் 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு மாணவியின் ரத்தம் மற்றும் சளி பரிசோதனை அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை. அவருக்கான மருத்துவ அறிக்கையும் விரைவில் வந்து சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவரும், சீனாவில் மருத்துவ படிப்பு பயின்று வரும் மாணவியுமான ஒருவர் கொரோனோ வைரஸ் தொடர்பான பரிசோதனைக்கு தாமாக முன் வந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் தனி வார்டில் சேர்ந்துள்ளார். அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாதபோதிலும், ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவருக்கான பரிசோதனை முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வந்து சேரும் என்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு அவரை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story