ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை,
ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும் என்று நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
ஆலோசனை கூட்டம்
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை எப்படி கொண்டாடுவது? என்பது குறித்து நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், “முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். தமிழக அரசு மக்களுக்கு செய்து வருகின்ற திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறியும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடவேண்டும். உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களை அ.தி.மு.க. கைப்பற்ற வேண்டும் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்து உழைக்க வேண்டும்” என்றார்.
மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசுகையில், “ஜெயலலிதா பிறந்தநாளை ஏழை–எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும். ஆங்காங்கே கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும். விரைவில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மிகப்பிரமாண்டமான முறையில் நடத்தப்படும்” என்றார்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில், ஜெயலலிதா 72–வது பிறந்த நாள் விழாவை சிறப்பான முறையில் கொண்டாடவேண்டும். அனைத்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், தர்கா மற்றும் ஆதரவற்ற அனைத்து காப்பகங்களிலும் அன்னதானம் வழங்கவேண்டும். அனைத்து இடங்களில் புதிய கொடிகம்பம், கல்வெட்டு அமைத்து கட்சி கொடி ஏற்றவேண்டும். கட்சியின் கிளை கழகம், பகுதி, ஒன்றியம், நகர பகுதிகளில் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமை அறிவிக்கின்ற வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், விஜிலா சத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பசாமி பாண்டியன், ஆர்.பி.ஆதித்தன், முத்துசெல்வி, சுப்பையா பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் மேயர் புவனேசுவரி, முன்னாள் துணைமேயர் ஜெகநாதன், முன்னாள் யூனியன் தலைவர் கல்லூர் வேலாயுதம், எஸ்.கே.எம்.சிவகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர்கள் ஜெனி, தச்சை மாதவன், ஹயாத், மோகன், விவசாய அணி செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப் ஜான், மகளிர் அணி செயலாளர் சுவர்ணா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொன்னுச்சாமி, முன்னாள் அரசு வக்கீல் வி.டி.திருமலையப்பன், முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமி, திவ்யா யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story