நாட்டுக்காக இல்லாமல் ஓட்டுக்காகவே மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார் ஈரோட்டில் இல.கணேசன் பேட்டி


நாட்டுக்காக இல்லாமல் ஓட்டுக்காகவே மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார் ஈரோட்டில் இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 9 Feb 2020 5:45 AM IST (Updated: 9 Feb 2020 2:31 AM IST)
t-max-icont-min-icon

நாட்டுக்காக இல்லாமல் ஓட்டுக்காகவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார் என்று ஈரோட்டில் இல.கணேசன் கூறினார்.

ஈரோடு,

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியில் புதிதாக ேதர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகள் அவரிடம் வாழ்த்து பெற்றார்கள்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இல.கணேசன் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம்

நரேந்திர மோடி இப்போது 2-வது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும் காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கி, காஷ்மீரை முழுமையாக இந்தியாவின் பகுதியாக மாற்றினார். நீண்டகால பிரச்சினையாக உள்ள குடியுரிமை சட்டம் குறித்து பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறி, மக்களின் ஆதரவால் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று இருக்கிறோம். நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் மசோதா கொண்டு வந்து சட்டமாக இயற்றி அமல்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர் பிரதமர் நரேந்திரமோடி என்பதால் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் தி.மு.க.வும் எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.

ஓட்டுக்காக போராட்டம்

வங்காளதேசத்தில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் கும்பல் கும்பலாக வந்து இங்கேயே குடியிருந்தவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுத்தும், வாக்காளர் பட்டியலில் பெயரையும் சேர்த்து அவர்களால் ஓட்டு பெற்று ஆட்சியில் அமர்ந்து வரும் மம்தா பானர்ஜி மற்றும் தமிழகத்தில் தி.மு.க.வினர்தான் எதிர்க்கிறார்கள். மக்கள் பிரச்சினைகள் எத்தனையோ இருக்கும்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து எதிர்த்து போராடுகிறார்கள் என்றால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்காக இல்லாமல் ஓட்டுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் என்று குற்றம்சாட்டுகிறேன். தை பூசத்துக்கு அரசு விடுமுறை விடப்பட வேண்டும் என்று சீமான் கூறுவதை ஏற்க முடியாது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் மீதான வருமான வரித்துறை சோதனைக்கு பா.ஜனதா கட்சியோ, அரசியல் காரணங்களோ கிடையாது. வருமானவரித்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு இருக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி. தேர்தல் முறைகேடு தொடர்பாக, தேவை என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அ.தி.மு.க.வுடன் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணி தொடர்கிறது. தமிழக பா.ஜனதா தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

பேட்டியின்போது மாநில பிரசார அணி பொறுப்பாளர் ஆ.சரவணன், வக்கீல் அணி மாநில தலைவர் என்.பி.பழனிச்சாமி, மாநில துணைத்தலைவர் சி.கே.சரஸ்வதி, மாவட்ட பொதுச்செயலாளர் குரு.குணசேகரன், மாவட்ட செயலாளர் ஏ.பி.கிருஷ்ணகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story