‘எவ்வளவு உயர் கல்வி கற்றாலும் கர்வம் கொள்ளக்கூடாது’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


‘எவ்வளவு உயர் கல்வி கற்றாலும் கர்வம் கொள்ளக்கூடாது’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 9 Feb 2020 4:30 AM IST (Updated: 9 Feb 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

எவ்வளவு உயர் கல்வி கற்றாலும் பணிவு என்பதை மறந்து விடக்கூடாது. கர்வம் கூடாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் கோவிலில் ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த சுவாமிகளின் 70-வது பிறந்த நாள் நிகழ்ச்சியையொட்டி, வேதம் பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நெரூரில் உள்ள ஸ்ரீவித்யா நரசிம்ம ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி வித்யாசங்கர சரஸ்வதி, ராம்கோ குழுமங்களின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா, வேத பாடசாலை மாணவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:-

வேதங்கள்

இந்து மதத்தின் அடிப்படை வேதங்கள்தான். இந்து மதத்தின் அடிப்படை மக்களின் கடமைகளை வகுத்துத்தருவது. தெய்வீகமும் நிறைந்தது. வேத இலக்கியம் என்பது கடல் போன்றது. அதை கற்று கரை சேர்ந்தவர் எவரும் இலர். எனினும் அவற்றின் சாராம்சத்தை மாணவர்களுக்கு கற்பித்து அதை இந்த சமுதாயத்திற்கு வழங்க வேத பாடசாலைகள் இயங்கி வருகின்றன. பாடம் கற்றல் என்பது மகிழ்ந்து அதில் லயித்து மனதில் பதிவு செய்ய வேண்டும். அது மிக சுலபம் இல்லை என்றாலும், கற்பிப்பவர்கள் உளமார்ந்த நிலையில் ஈடுபாட்டுடன் பயிற்றுவிக்க வேண்டும். மாணவர்களும் அதை கற்கும்போது மிகுந்த சிரத்தை எடுத்து கற்றுக்கொள்ளவேண்டும்.

படித்த பாடங்களை நெஞ்சில் நிலைநிறுத்தி சிரத்தையுடன் அதை பாதுகாக்க வேண்டும். வேதம் பயில்வது குறித்து எனது நண்பர்கள் மூலமாக நானும் ஓரளவு அறிந்து வைத்துள்ளேன். சரியான உச்சரிப்புடன் வேதம் மாணவர்கள் சொல்லும் வரை குரு அதை பலமுறை ஒலித்துக்கொண்டே இருப்பார். 100 சதவீதம் தவறு என்பதே இல்லாத முழுமை தான் வேத பாடத்தின் வெற்றி என்று கற்றறிந்த வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள். மனம், நெறி, வாக்கு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைய செய்து வேதபாடம் கற்கின்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் இந்த உலகம் பாராட்டுகிறது.

கர்வம் கூடாது

வேதம் பயிலும் மாணவர்களாகிய நீங்கள் மிக உன்னதமான மேன்மையான வாழும் முறையை தேர்ந்தெடுத்து உள்ளர்கள். இங்கு பயிலும் நுட்பமான விஷயங்களை நடைமுறையிலும் கடைபிடித்து இந்த சமுதாயத்திற்கு முன்மாதிரியாக விளங்கி நம்முடைய சமுதாயம் மேம்பட அனைவரும் சமய தொண்டினை நல்கிட வேண்டும். எவ்வளவு உயர்ந்த கல்வி கற்றாலும் எத்தகைய புத்தகங்களைப் படித்தாலும் பணிவு என்பதை மறந்து விடக்கூடாது. கர்வம் கொள்ளக்கூடாது. பணிவு என்பது செல்வர்களுக்கு கூடுதல் செல்வம் போன்றது என்கிறார் திருவள்ளுவர். இவ்வாறு அவர் பேசினார்.

பகவத் கீதை ஒப்புவித்தல் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த சுப்பிரமணியம் என்ற மாணவருக்கு அவர் பரிசு வழங்கி பாராட்டினார்.

Next Story