ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 8 Feb 2020 11:00 PM GMT (Updated: 8 Feb 2020 9:59 PM GMT)

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகள் சிலர், நாட்டு வெடிகுண்டு வீசி பெட்ரோல் பங்க் மேலாளரை படுகொலை செய்தனர். இந்த சம்பவம் விழுப்புரம் நகர பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோ‌‌ஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை வரவழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது ரவுடிகளின் நடவடிக்கைகளை தடுக்க தவறியது ஏன் என்று போலீஸ் அதிகாரிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிந்து கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

ரவுடிகள் அட்டகாசம்

விழுப்புரம் நகரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனது வீட்டின் அருகிலேயே ஏராளமான ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். ரவுடிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி போலீஸ் அதிகாரிகள் எடுக்கப்போகிற நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களும், வியாபாரிகளும் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி தங்களது அன்றாட பணிகளை நிம்மதியாக கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வளர்ச்சி திட்டங்கள்

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி அனைத்துத்துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ததோடு அரசு திட்டங்கள் அனைத்தும் எவ்வித தொய்வும் இன்றி மக்களை சென்றடைய வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story