மேல்மருவத்தூரில் தைப்பூச விழா தெலுங்கானா கவர்னர் பங்கேற்பு


மேல்மருவத்தூரில் தைப்பூச விழா தெலுங்கானா கவர்னர் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Feb 2020 4:45 AM IST (Updated: 9 Feb 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூரில் தைப்பூச விழா நடந்தது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

மதுராந்தகம்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தைப்பூச பெருவிழா நடந்தது. இதையொட்டி சித்தர் பீடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி முதல் தைப்பூச சக்திமாலை அணிந்து சக்தி விரதம் இருந்து இருமுடி எடுத்து வந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

நேற்றுடன் இருமுடி விழா நிறைவு பெற்றது.

தைப்பூச விழா

தைப்பூச விழா நேற்று முன்தினம் காலை மங்கள இசையுடன் தொடங்கியது. சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மிககுரு பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர்.

மாலை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் கலசவிளக்கு, வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். நேற்று காலை சிறப்பு அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

கோபூஜை

தைப்பூச ஜோதி ஏற்றப்படும் ஆதிபராசக்தி விளையாட்டு வளாகம், செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இயக்கத்தின் பாதுகாப்பு குழுவினர் விழாவிற்கு வந்த பக்தர்களை அவரவருக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்புவதில் திறமையாக செயல்பட்டனர்.

குரு ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் இல்லத்தின் முன் நடைபெற்றது. முதலில் கோபூஜை நடைபெற்றது. பின்னர் குரு ஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைக்க, 5 பெண்கள் அந்த ஜோதியை எடுத்து வந்தனர்.

மாலை ஆன்மிக குருவின் இல்லத்தில் இருந்து தொடங்கிய “குரு ஜோதி” ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத்தலைவர்கள் கோ.ப.அன்பழகன் தலைமை வகிக்க, ஆன்மிக இயக்கத் துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார்.

“குரு ஜோதி ஊர்வலம்”

பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்ந ஊர்வலத்தில் நாதஸ்வர இசையும், தொடர்ந்து தேவர் ஆட்டம், நடனமாடும் குதிரை, ஒயிலாட்டம், பேண்டு வாத்தியங்கள், கிராமியக்கலை, பொய்க்கால் குதிரை, நைய்யாண்டி மேளம் இவற்றுடன் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள் அந்தந்த நாடுகளின் பெயர் எழுதப்பட்ட பதாகைகளுடன் தொடர, கேரள செண்டை வாத்தியம் முழங்க, மகளிர் சீர்வரிசைகளுடன் “குரு ஜோதி ஊர்வலம்” ஜோதித்திடலை அடைந்தது.

ஜோதி ஏற்றப்படும் செப்புக் கொப்பரைக் கலசம் இயற்கை முறையில் விளைப் பொருட்களால் சிறப்புற அலங்கரிக்கப்்பட்டு கம்பீரமாக ஜோதி மேடையின் மத்தியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே ஜோதி கலசத்தின் முன்புறம் “குரு ஜோதி” நிறுவப்பட்டது.

பிரமுகர்கள் பங்கேற்பு

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக சித்தர்பீடம் வந்த கவர்னர், கருவறையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிப்பட்டார். மாலை ஆன்மிககுரு பங்காரு அடிகளார் முன்னிலையில் தெலுங்கனா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தைப்பூச ஜோதியை ஏற்றினர்.

விழாவில் முக்கிய பிரமுகர்களான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி, அரசு சிறப்பு திட்டங்களின் இயக்குனர் ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஜோதி பிரசாதத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ் வினியோகித்தார்.

விழா ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும், இயக்கத்தின் ஈரோடு மாவட்டத்தின் மன்றங்களும், சக்திபீடங்களும் சிறப்பாக செய்திருந்தன.

Next Story