கோவிலுக்கு சென்ற பெண்களிடம் செயின்பறிப்பு மர்ம கும்பல் துணிகரம்


கோவிலுக்கு சென்ற பெண்களிடம் செயின்பறிப்பு மர்ம கும்பல் துணிகரம்
x
தினத்தந்தி 9 Feb 2020 4:54 AM IST (Updated: 9 Feb 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கோவிலுக்கு சென்ற பெண்களிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் விசேஷ நாட்களில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனை பயன்படுத்திக்கொண்டு மர்ம கும்பல் செயின்பறிப்பில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து பெண்கள் சிலர் புதுவைக்கு வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. குடும்ப பெண்கள்போல கோவிலுக்கு வரும் இவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அருகில் இருக்கும் பெண்கள் அணிந்துள்ள நகையை பறித்துச் செல்கின்றனர்.

இதுபோன்ற சம்பவம் புதுவை கோவில்களில் நடந்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

பெண்கள் கைவரிசை

புதுவை கருவடிக்குப்பம் செந்தாமரை நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி தங்கம் (வயது 65).

இவர் கருவடிக்குப்பம் சித்தானந்தா சாமி கோவிலுக்கு சாமிகும்பிட சென்றுள்ளார். அப்போது அவரது அருகே சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண்கள் சிலர் நின்று சாமிகும்பிடுவது போல் நடித்து தங்கம் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை அறுத்து சென்றனர்.

இதுகுறித்து போலீசில் தங்கம் புகார் செய்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈஸ்வரன்கோவில்

இதேபோல் லாஸ்பேட்டை சாந்தி நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த கங்காதரன் மனைவி லதா (52) புதுவை காந்தி வீதி ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் மேலும் ஒரு பெண்ணிடமும் செயின் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்யவில்லை.

கண்காணிப்பு கேமரா

இந்த திருட்டு சம்பவங்களில் பெண்களே ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே செயின் பறிப்பில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் யாரேனும் இதில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story