பெரம்பலூரில் ரியல்எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி பத்திர எழுத்தர் மீது போலீசில் புகார்


பெரம்பலூரில் ரியல்எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி பத்திர எழுத்தர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 9 Feb 2020 10:15 PM GMT (Updated: 9 Feb 2020 8:05 PM GMT)

பெரம்பலூரில் ரியல்எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக பத்திர எழுத்தர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் வைத்து நடத்திவருபவர் முத்தையா(வயது 55). பெரம்பலூரில் உள்ள எளம்பலூர் சாலை தென்றல் நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(56). இவர் பதிவுசெய்யப்பட்ட பத்திர எழுத்தராக பணியாற்றிவருகிறார். இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 88 சென்ட் நிலம் செங்குணம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் முத்தையா, பத்திர எழுத்தர் தங்கராஜூவிற்கு சொந்தமான நிலத்தை ரூ.17 லட்சத்து 10 ஆயிரத்திற்கு வாங்குவதற்காக விலைபேசி ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை தங்கராஜூவிடம் முன்பணமாக கொடுத்துள்ளார். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி 9 மாதத்திற்குள் தங்கராஜூ மீதமுள்ள தொகை பெற்றுக்கொள்வதற்கும், முத்தையாவிற்கு தனது நிலத்தை பதிவு செய்துகொடுக்கவும் முன்வரவில்லை. ஆனால் கவுல்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியத்தின் மகன் ரமே‌ஷிற்கு தங்கராஜ் தனது நிலத்தை விற்பனை செய்து பத்திரப் பதிவு செய்துகொடுத்துள்ளார்.

புகார்

இதனிடையே நிலத்திற்காக கொடுத்த முன்பணம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை திருப்பி தருமாறு முத்தையா, தங்கராஜூவிடம் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு பணத்தை திருப்பி தர மறுத்த தங்கராஜூ, அவரது மகன் கார்த்திக், மகள் மீனா ஆகியோர் சேர்ந்து முத்தையாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் பாதிக்கப்பட்ட முத்தையா பெரம்பலூர் போலீசில் தங்கராஜ், அவரது மகன் கார்த்திக், மகள் மீனா மற்றும் நிலத்தை வாங்கி பதிவு செய்துகொண்ட ரமே‌‌ஷ் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story