குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் அரியலூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை


குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் அரியலூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2020 10:15 PM GMT (Updated: 9 Feb 2020 8:18 PM GMT)

குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என அரியலூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர்,

அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனிநபர் குடியிருப்புகள், அனைத்து வணிகர்கள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் தினசரி உற்பத்தியாகும் குப்பைகளுக்கு அவர்களே பொறுப்பாவார்கள். தற்போது அரியலூர் நகராட்சி பணியாளர்கள் மூலமாக குப்பைகள் வீடு, வீடாக தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை வாங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தினசரி சேகரமாகக்கூடிய குப்பைகளை மக்கும் (காய்கறிகள், பழங்கள், உணவு கழிவுகள், காகிதம் போன்றவை), மக்காத கழிவுகள் (பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை) என தரம் பிரித்து வழங்கிட கேட்டு கொள்ளப்படுகிறது. தனிநபர் வீடுகளில் தினசரி சேகரமாகக்கூடிய குப்பைகளில் மின் சாதனக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை பிரதி வாரம் புதன்கிழமை தோறும் நகராட்சி பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.

சட்டரீதியான நடவடிக்கை...

மேலும் தனிநபர் இல்லங்களிலுள்ள அபாயகரக் கழிவுகளான நாப்கின், டயாபர்ஸ் ஆகியவற்றை தனியே வழங்கிட வேண்டும். வணிக நிறுவனத்தினர் தங்களின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளில் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தரம் பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் காலை 10 மணிக்கு முன்பாக வழங்கிட வேண்டும். மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரிக்காமல் சாலைகளில் தூக்கி எறிதல், கொட்டுதல், தரம் பிரிக்காமல் வழங்குதல் போன்ற தவறுகளை மேற்கொண்டால் திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் துணை விதிகள் 2016-ன் படி வீடுகளில் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குதல் நாளொன்றுக்கு ரூ.10-ம், வணிக நிறுவனங்கள் தரம் பிரிக்காமல் வழங்குதல் நாளொன்றுக்கு ரூ.250-ம், குப்பைகளை சாலைகளில் தூக்கி எறிதல், கொட்டுதல் நாளொன்றுக்கு ரூ.500-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story