லால்குடி பகுதியில் தண்டுகுலை நோய் தாக்கியதால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்


லால்குடி பகுதியில் தண்டுகுலை நோய் தாக்கியதால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்
x
தினத்தந்தி 10 Feb 2020 4:30 AM IST (Updated: 10 Feb 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி பகுதியில் தண்டுகுலை நோய் தாக்கியதால் சுமார் ஆயிரம் ஏக்கம் நெற்பயிர்கள் நாசமாயின. இதனால் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டத்தில் லால்குடி பகுதியில் பெருவளநல்லூர், பல்லபுரம், புள்ளம்பாடி பகுதியில் புஞ்சை சங்கேந்தி, நஞ்சை சங்கேந்தி, வெள்ளனூர் ஆகிய பகுதிகளில் பெருவளவாய்க்கால் மூலம் பாசனம் பெற்று 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. நெற்கதிர்கள் முற்றிய நிலையில் சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யும் நிலையில் இருந்த நெற்கதிர்கள், தண்டுகுலை நோய் தாக்கியதால் சாய்ந்தும், நெல்மணிகள் பதராகவும் காணப்படுகிறது.

இதில் கோ 50, தன்வி, கோ 51 ஆகிய நெல் ரகங்களில் பழ நோய் மற்றும் தண்டுகுலை நோய் தாக்கியதால் நெல் மணிகள் பதராக காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா பொன்னி நடவு செய்த பகுதிகளில் தண்டுகுலை நோய் தாக்கியதில் நெல் மணிகள் 70 சதவீதம் பதராக மாறியுள்ளன. இது பற்றி விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலரிடம் தெரிவித்து, அவர்களின் ஆலோசனை படி மருந்துகள் தெளித்தும் போதிய பலனளிக்கவில்லை. தண்டுகுலை நோய் தாக்கியதால் சேதமடைந்த நெற்பயிர்கள் மட்டுமல்லாது வைக்கோலையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

இது பற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஏக்கருக்கு 30 சதவீதம் கூட மகசூல் கிடைக்கவில்லை. விவசாயிகள் தேசிய வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் விவசாய கடன் பெற்றும், நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் செய்துள்ளனர். 70 சதவீத விவசாயிகள் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் மூலம் காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் காப்பீடு செய்யாத நிலையில் உள்ளனர்.

சம்பா சாகுபடி அறுவடை செய்ய இருந்த நிலையில் குலை நோய் தாக்கி நெற்பயிர்கள் நாசமானது பெருத்த ஏமாற்றத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேதனையும், கவலையும் அடைந்துள்ளோம். எனவே மாவட்ட கலெக்டர் லால்குடி பகுதியில் பார்வையிட்டு, நெற்பயிரில் தண்டுகுலை நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story