பந்தலூர் அருகே பரிதாபம், மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்; கல்லூரி மாணவர் பலி - டிரைவர் படுகாயம்
பந்தலூர் அருகே மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இருந்தார். மேலும் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே மண்ணாத்தி வயல் பகுதியை சேர்ந்தவர் குஞ்சுகுட்டி. இவருடைய மகன்அனஸ்ரகுமான் (வயது 20). இவர் தாளூரில் உள்ள நீலகிரி அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அனஸ்ரகுமான் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கையுன்னி வழியாக எருமாடு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
கப்பாலா பழங்குடியினர் காலனி அருகே சென்றபோது எதிரே எருமாட்டிலிருந்து கையுன்னி நோக்கி வந்த ஆட்டோவும், மாணவர் அனஸ்ரகுமான் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளும் நொறுங்கியது.
மேலும் இந்த விபத்தில் மாணவர் அன்ஸ்ரகுமான் மற்றும் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் முகமது ஷகீர் (26) என்பவரும் படுகாயம் அடைந்தனர். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவர் அனஸ்ரகுமானை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் டிரைவருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எருமாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர் கதறி அழுதது பார்க்க பரிதா பமாக இருந்தது.
Related Tags :
Next Story