தேவாரத்தில் மீண்டும் அட்டகாசம்: காட்டு யானை தாக்கி தாய்-மகன் படுகாயம்
தேவாரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை, தாய்-மகனை தாக்கியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
உத்தமபாளையம்,
தேவாரம் மலையடிவார பகுதியில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னை, மரவள்ளி கிழங்கு, நிலக்கடலை, தட்டை பயறு உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேவாரம் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஒற்றை காட்டு யானை புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் தோட்டங்களில் இரவில் காவல் பணியில் ஈடுபடும் விவசாயிகளை தாக்குவது என்று ஒற்றை காட்டுயானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. அந்த ஒற்றை காட்டுயானை தாக்கியதில் பெண் உள்பட 10 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். எனவே காட்டு யானையை பிடித்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த ஒற்றை யானையை இதுவரை வனத்துறையினர்பிடிக்கவில்லை.
இந்தநிலையில் தேவாரம் சிறைவட்ட பகுதியில் உள்ள சண்முகம் என்பவரது கரும்பு தோட்டம் மற்றும் மரவள்ளி கிழங்கு தோட்டத்திற்குள் நேற்று ஒற்றை காட்டுயானை புகுந்து நாசம் செய்தது. பின்னர் அருகில் இருந்த தேவாரத்தை சேர்ந்த மைனாவதி (வயது 63) என்பவரது தென்னந்தோப்புக்குள் அது புகுந்தது. இதற்கிடையே மைனாவதி, தனது மகன் முருகனுடன் (46) தனது தென்னந்தோப்புக்கு வந்தார். அப்போது தோட்டத்திற்குள் மறைந்து நின்ற ஒற்றை காட்டு யானை, மைனாவதி மற்றும் முருகனை விரட்டி தாக்கியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதற்கிடையே அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த தோட்டங்களில் வேலை செய்த விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். அதற்குள் அந்த ஒற்றை காட்டு யானை வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. பின்னர் மைனாவதி, முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவாரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story