கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முதல் சாட்சி கிரு‌‌ஷ்ணதாபா ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முதல் சாட்சி கிரு‌‌ஷ்ணதாபா ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 5:22 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் சாட்சியான கிரு‌‌ஷ்ணதாபா ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார். மேலும் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ‌‌ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோ‌‌ஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கடந்த மாதம் 2-வது, 3-வது சாட்சிகள் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து ‌‌ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். சம்சீர் அலி தவிர மற்ற 7 பேரும் ஆஜரானார்கள். சம்பவத்தன்று கையில் வெட்டு காயம் அடைந்த காவலாளி கிரு‌‌ஷ்ண தாபா(முதல் சாட்சி), கோடநாடு எஸ்டேட் டிரைவர் யோகநாதன்(4-வது சாட்சி) ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் அரசு வக்கீல் நந்தகுமார் விசாரணை நடத்தினார்.

பின்னர் முதல் சாட்சியான கிரு‌‌ஷ்ண தாபா நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தபோது கூறியதாவது:-

நேபாளம் நாட்டில் பகலோன் மாவட்டம் நிதின்புகரா கிராமத்தை சேர்ந்தவன் நான். எனக்கு 2 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர். தற்போது எனது நாட்டில் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல், உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளேன். இதற்கு கோடநாடு சம்பவம் தான் காரணம். 23.4.2017-ந் தேதி மாலை 6 மணிக்கு 8-வது நுழைவுவாயிலில் பணிபுரிவதற்காக வந்தேன். இரவு 10 மணிக்கு 10-வது நுழைவுவாயிலில் ஓம்பகதூர் பணியில் இருந்தார். இருவரும் சேர்ந்து உணவருந்தினோம்.

பின்னர் நான் 8-வது நுழைவாயிலுக்கு வந்து விட்டேன். காவலாளி அறை கண்ணாடி உடைந்து இருந்ததாலும், கடுங்குளிர் காரணமாகவும் எஸ்டேட் லாரியில் ஏறி அமர்ந்து பணியில் ஈடுபட்டேன். நள்ளிரவு 12 மணியளவில் 8 பேர் 8-வது நுழைவுவாயிலுக்குள் வந்தனர். அப்போது நான் கீழே இறங்க முயற்சித்தபோது, 6 பேர் லாரியில் ஏறி என்னை தாக்கி வலது கை விரலில் வெட்டினர். பின்னர் கயிற்றால் கை, கால்களை கட்டி போட்டனர். ஒருவர் எனது செல்போனை பறித்து விட்டார். பங்களாவுக்குள் சென்றவர்கள் ஒரு மணி நேரத்துக்கு பிறகு திரும்பி வந்து 2 கார்களில் புறப்பட்டு சென்றனர்.

இதையடுத்து நான் கையில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை வாயால் அவிழ்த்தேன். பின்னர் 10-வது நுழைவுவாயிலுக்கு சென்ற போது, கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. நுழைவுவாயில் அருகே இருந்த மரத்தில் தலைகீழாக ஓம்பகதூர் கட்டப்பட்டு கிடந்தார். நான் அவரை கூப்பிட்டேன்.

பின்னர் தொட்டு பார்த்தபோது, அவர் மூச்சு விடவில்லை. அவர் இறந்து இருப்பது தெரியவந்தது. அங்கிருந்து 7-வது நுழைவுவாயிலுக்கு சென்று காவலாளி பஞ்ச விஸ்வகர்மாவிடம் நடந்ததை கூறினேன். பின்னர் அவர் எஸ்டேட் எழுத்தர் ராதாகிரு‌‌ஷ்ணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து எழுத்தர், டிரைவர் யோகநாதன், காவலாளி சுனில் தாபா சரக்கு வாகனத்தில் 7-வது நுழைவுவாயிலுக்கு வந்தனர். பின்னர் நாங்கள் 10-வது நுழைவுவாயிலுக்கு சென்று பார்த்தோம். அங்கு ஓம்பகதூர் இறந்த நிலையில் கிடந்தார். பின்னர் காயம் அடைந்த என்னை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு போலீசார் விசாரணை நடத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார். அதன் பின்னர் நீதிபதி வடமலை, முதல் சாட்சியிடம் நேரடியாக அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்டார்.

அப்போது ‌‌ஷயான், மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேரை கிரு‌‌ஷ்ண தாபா அடையாளம் காண்பித்தார். சம்பவம் நடந்த சில நாட்களில் கோவை மத்திய சிறையில் நீதிபதி முன்பு சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காட்டியதாகவும், தனது வாயில் ஸ்பிரே அடித்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், என்னால் வேலை செய்ய முடியவில்லை என்பதால் உதவி பெற்றுத்தர வேண்டும் என்றும் நீதிபதியிடம் கிரு‌‌ஷ்ண தாபா கூறினார். இதையடுத்து 4-வது சாட்சியான யோகநாதனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவர் 15 ஆண்டுகளாக எஸ்டேட்டில் பணிபுரிந்ததாகவும், சம்பவத்தன்று நடந்த விவரங்களையும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி வடமலை சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்துகிறீர்களா? என்று எதிர்தரப்பு வக்கீல் ஆனந்திடம் கேட்டார். அதற்கு அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கில் இருந்து அனைவரையும் விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது, அதில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு தெரிவிக்கப்படும். சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்யவில்லை என்றார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Next Story