2-ம் போக நெல் சாகுபடி நடைபெறாத நிலையில் வாய்க்காலில் வீணாக தண்ணீர் திறப்பு - விவசாயிகள் எதிர்ப்பு
உத்தமபாளையம் பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி பணிகள் நடைபெறாத நிலையில் வாய்க்காலில் வீணாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உத்தமபாளையம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் பல ஆண்டுகளாக இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் இருபோக விவசாயம் முழுமை பெறாமல் ஒரு போக விவசாயம் மட்டுமே நடந்து வந்தது. இந்த ஆண்டும் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே 2-ம் போக விவசாயத்தை கைவிடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் 2-ம் போக நெல் சாகுபடியை கைவிட்டனர்.
ஆனால் 2-ம் போக நெல் சாகுபடி நடைபெறாத நிலையில் பாளையம் பரவு வாய்க்காலில், முல்லைப்பெரியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த 10 தினங்களுக்கு மேலாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 2-ம் போக நெல் சாகுபடியை கைவிட்ட பிறகு எதற்காக வாய்க்காலில் வீணாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய விவசாயிகள், தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், கோடைகாலங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதன்காரணமாக 2-ம் போக நெல் சாகுபடியை கைவிட்டோம். ஆனால் விவசாய பணிகள் நடைபெறாத நிலையில் வாய்க்காலில் வீணாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எதற்காக தண்ணீர் திறக்கப்பட்டது என்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். தனியார் சிலர் பயன்பெறுவதற்காக தண்ணீர் திறக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல் உத்தமபாளையம் தாமரைகுளம் கண்மாய்க்கும் தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர். கண்மாய் பாசன பகுதியிலும் விவசாயம் நடைபெறவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story