ஸ்ரீரங்கத்தில் வாரச்சந்தை நடத்தக்கூடாது கலெக்டரிடம் வியாபாரிகள் மனு


ஸ்ரீரங்கத்தில் வாரச்சந்தை நடத்தக்கூடாது கலெக்டரிடம் வியாபாரிகள் மனு
x
தினத்தந்தி 11 Feb 2020 4:30 AM IST (Updated: 11 Feb 2020 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாரச்சந்தை நடத்தக் கூடாது என்று கலெக்டரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட கடைகளில் காய்கனி வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் நகர காய்கனி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தராஜூ, முன்னாள் ராணுவ வீரர் கந்தன் உள்ளிட்ட வியாபாரிகள் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 10 வாரமாக ஸ்ரீரங்கம் பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் திடீர் சந்தைகள் போடப்பட்டு வருகிறது. தெப்பக்குளம் அருகில் திங்கட்கிழமையும், கீதாபுரத்தில் வியாழக்கிழமையும் என 2 நாட்கள் மாலை வேளையில் காய்கனி வாரச்சந்தை நடத்தப்படுகிறது. இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த திடீர் வாரச்சந்தையால் வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாரச்சந்தையை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தர்ணா

மக்கள் உரிமை மீட்பு இயக்க நிர்வாகி தாயுமான், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையில் சமூக விரோதிகளுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மரம் வெட்டி கடத்துபவர்களை தடுத்ததால் என்னையும், என் குடும்பத்தாரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

பேத்தியுடன் ஆட்டோ டிரைவர் தர்ணா

திருச்சியை அடுத்த நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வரும் ஆட்டோ டிரைவரான முகமது இப்ராகிம் நேற்று தனது பேத்தியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு, தனது அண்ணனிடம் இருந்து, தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை மீட்டு தரும்படி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

சங்கு ஊதி மனு

திருவெறும்பூர் மலைக்கோவில் கிராமத்தில் உள்ள நெற்பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பழனிவேல் மற்றும் ராஜேந்திரன், அப்துல்சத்தார் உள்ளிட்ட சிலர் சங்கு ஊதியபடி மனு கொடுக்க வந்தனர்.ஐக்கிய மக்கள் நல கழகம் சார்பில் கொடுத்த மனுவில், திருச்சி புத்தூர் மீன்மார்க்கெட்டில் மீன்களில் ரசாயன மருந்து அடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

Next Story