திருவெறும்பூர், லால்குடி பகுதிகளில் குலைநோய் தாக்குதலால் நாசமான 1,200 ஏக்கர் நெற்பயிர்


திருவெறும்பூர், லால்குடி பகுதிகளில் குலைநோய் தாக்குதலால் நாசமான 1,200 ஏக்கர் நெற்பயிர்
x
தினத்தந்தி 11 Feb 2020 4:15 AM IST (Updated: 11 Feb 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர், லால்குடி பகுதிகளில் குலைநோய் தாக்குதலால் பதராகிப்போன 1,200 ஏக்கர் நெற்பயிர் நாசமாகி விட்டதாகவும், அதற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கலெக்டரிம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர், லால்குடி உள்பட மாவட்டம் முழுவதும் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரை அறுவடை பருவத்தில் உள்ளது. நெற்கதிர்களில் பரவலாக குலைநோய், புகையான் மற்றும் கரிப்பூட்டை நோய் தாக்குதலால் நெற்பயிர்களில் உள்ள நெல் மணிகள் பதராகிப்போய் காட்சி அளிக்கின்றன.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புறநகர் மாவட்ட பொருளாளர் ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமையில் திரளான விவசாயிகள் குலைநோய் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குலைநோய் தாக்குதல்

திருவெறும்பூர் வட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் பரவலாக குலைநோய், புகையான் மற்றும் நெல்பழம் நோய்கள் தாக்கி உள்ளன. கிளியூர், பத்தாளப்பேட்டை, திருநெடுங்குளம், வாழவந்தான் கோட்டை, அசூர் உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் நெற்பயிர்களை நோய்கள் அதிக அளவில் தாக்கி உள்ளது. இதனால், விவசாயிகள் மகசூல் பாதிக்கப்பட்டு நெல்மணிகள் நாசமாயின.

இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,200 ஏக்கர் பாதிப்பு

லால்குடி தாலுகாவுக்குட்பட்ட புஞ்சை சங்கேந்தி மற்றும் நஞ்சை சங்கேந்தி கிராமங்களை சேர்ந்த விவசாய சங்க தலைவர் தியாகராஜன் மற்றும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் கரிப்பூட்டை நோய், நெல்பழநோய், புகையான் மற்றும் குலைநோய் தாக்குதலுக்கு உட்பட்ட நெற்கதிர்களை கையில் ஏந்தியபடி கோ‌‌ஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். வேளாண் அதிகாரிகள் சொன்னதன் பேரில்தான் கோ-50, கோ-51, கோ-52, ஆடுதுறை 37 ரக நெல்களை சாகுபடி செய்தோம். தற்போது கதிர்வந்து பால்பிடித்து முற்றும் பருவத்தில் கரிப்பூட்டை, புகையான் உள்ளிட்ட நோய்களால் தாக்கப்பட்டு பதர்களாகிப்போனது.

சுமார் 1,200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் பதராகிப்போனதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.28 ஆயிரம் செலவு செய்து நெல்சாகுபடி செய்துள்ளோம். எனவே, அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினார்கள். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுதான் விவசாயம் செய்துள்ளோம். எனவே, கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என விவசாயிகள் கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து மனு கொடுத்தனர். இதுபோல பத்தாளப்பேட்டை கிராம பொதுநிர்வாக கமிட்டியினரும் விவசாயிகளும் குலைநோய், புகையான் உள்ளிட்ட நோய் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மணல் குவாரி திறக்கக்கூடாது

காவிரி ஆறு, உய்யக்கொண்டான் வாய்க்கால், திருநெடுங்குளம் ஏரி, வழங்கு வாய்க்கால், தட்டான்குளம் ஏரி, மாங்காவனம் ஏரியின் ஒருபகுதி பாசனதாரர் சபை பொருளாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில், தேவராயநேரி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 200 ஏக்கர் நிலத்தில் ஆந்திர பொன்னி, அட்சயா பொன்னி போன்ற நெற்பயிர்களில் குலைநோய், புகையான், வேர் அழுகல் நோய் பாதிப்பால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் மற்றும் விவசாயிகள் கொடுத்துள்ள மனுவில், திருச்சி மாவட்டத்தில் வாழை, கரும்பு, எள், உளுந்து போன்ற பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் குறைய தொடங்கி விட்டது. எனவே, தொடர்ந்து நீர்மட்டம் குறையாமல் இருக்க கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளில் மணல் குவாரி திறக்க அனுமதிக்கக்கூடாது. மேலும் குடிமராமத்து பணிகள் மூலம் ஏரிகள், சிறுபாசன ஏரிகள், கிளைப்பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Next Story