தாராபுரம் அருகே, ஊராட்சி தலைவியின் இருக்கையில் அமர்ந்து டிக்-டாக் செய்த கணவர் - சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு
தாராபுரம் அருகே ஊராட்சி தலைவியின் இருக்கையில் அமர்ந்து டிக்-டாக் செய்த கணவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தலைவியாக செல்வி என்பவர் வெற்றி பெற்றார். இவரது கணவர் ரமேஷ். இவர் இங்குள்ள மின் மயானத்தில் வேலை செய்து வந்தார். தற்போது அந்த வேலைக்குச் செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள தலைவர் இருக்கையில் ரமேஷ் அமர்ந்து கொண்டு, சினிமா பாடல் மற்றும் சினிமா வசனத்திற்கு ஏற்ப டிக்-டாக் செய்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.அந்த டிக்-டாக் செயலியில் சிரித்துக்கொண்டு அவர் பாடல் பாடும் காட்சி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிக்-டாக் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ரமேசின் டிக்-டாக் காட்சிகள் குறித்து கலெக்டருக்கு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊராட்சி அலுவலக வங்கி கணக்கு புத்தகம், அதில் உள்ள இருப்புத்தொகை, ஊராட்சி அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஆகியவை அனைத்தையும் சரியாக உள்ளனவாக என்பதை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும். தலைவர் இருக்கையில் அமர்ந்து டிக்-டாக் செய்த ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ரமேஷ் கூறும்போது ’ ஊராட்சி அலுவலகத்திற்கு வாகனத்தில் புதிய இருக்கைகள் வந்தது. இருக்கைகளை வாகனத்தில் இருந்து இறக்கி வைப்பதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. நானும் சிலரும் சேர்ந்து இருக்கைகளை வாகனத்திலிருந்து இறக்கி வைத்தோம். அப்போது தான் இது நடந்தது. இது தவறு என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் டிக்-டாக் காட்சியை நானே சமூகவலைதளங்களில் வெளியிட்டிருக்க மாட்டேன். இது தெரியாமல் நடந்துவிட்டது. தவறை ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்‘ என்றார்.
Related Tags :
Next Story