காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு பறக்கும் கொடைக்கானல் ரோஜாக்கள்


காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு பறக்கும் கொடைக்கானல் ரோஜாக்கள்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:00 PM GMT (Updated: 11 Feb 2020 7:56 PM GMT)

காதலர் தினத்துக்காக, கொடைக்கானலில் இருந்து ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொடைக்கானல்,

உலகம் முழுவதும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்களது மகிழ்ச்சியை பரிமாறி கொள்வதற்காக பூக்களை பரிசாக வழங்குவது வழக்கம். இதில் முக்கிய இடத்தை பிடிப்பது ரோஜா மலர்கள் ஆகும்.

இதைக்கருத்தில் கொண்டு கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கொய்மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் காதலர் தினத்துக்காக, கொடைக்கானல் பகுதியில் நேற்று ஏராளமான ரோஜா பூக்கள் பறிக்கப்பட்டன. பின்னர் அந்த பூக்கள் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள குளிரூட்டும் நிலையத்தில் தரம் பிரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயி மூர்த்தி கூறுகையில், கொய்மலர்களான காரனேசன், ஜெபரா, ரோஜா மலர்கள் சாகுபடிக்கு ஏற்ற இடமாக கொடைக்கானல் மேல்மலை பகுதி விளங்குகிறது. காதலர் தினத்தையொட்டி தரம் வாய்ந்த ரோஜா பூக்கள் கொடைக்கானலில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொடைக்கானலில் குளிர்பதன வசதி இல்லை. இதனால் இங்கிருந்து பெங்களூருவுக்கு பூக்கள் அனுப்பப்படுகின்றன. கொடைக்கானலில் ஒரு ரோஜாப்பூ ரூ.16-க்கு விற்பனையாகிறது. இவை வெளிநாடுகளில் ரூ.35-ல் இருந்து ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொடைக்கானல் பகுதியில் குளிர் பதனிடும் அறைகளை ஏற்படுத்தி பூக்களை தரம் பிரித்து வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story