பதிவு செய்து 20 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்


பதிவு செய்து 20 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2020 3:45 AM IST (Updated: 12 Feb 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்து கடந்த 20 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோட்ட செயற்பொறியாளர் பிரகாசம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக விவசாய சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை உள்பட விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு மின் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். அப்போது மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை வகித்து பேசுகையில், பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 3,500 மின்மாற்றிகள் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சாய்ந்த மின்கம்பங்கள், பழுதடை மின்கம்பங்கள் அகற்றி புதிதாக வேறு மின்கம்பங்கள் நடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதைதொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கருப்பையாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் இதுவரை 20 ஆண்டுகளாக சாதாரணமுன்னுரிமை அடிப்படையில் சுயநிதி திட்டம், தாட்கோ திட்டம், தட்கல் திட்டம், பிற்பட்டோர் நல திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் இதுவரை மின் இணைப்பு வேண்டி தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை கொடுத்து மின் இணைப்பு வழங்கிடவேண்டும். 3 மாதங்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையின் காரணமாக அயன் பேரையூர்- வி.களத்தூரில் செல்லும் சாலை அருகே விவசாய நிலங்களில் சாய்ந்துள்ள மின்கம்பம், ஆண்டிகுரும்பலூர் ஏரியின் உள்புறம், சாய்ந்துள்ள மின்கம்பங்களை நிமிர்த்தி நட்டும், தொங்கும் நிலையில் உள்ள மின்கம்பிகளை இழுத்து கட்டிடவேண்டும். மின்வாரியத்தில் தேவையான கம்பியாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே தேவையான ஆட்களை பணிநியமனம் செய்து தடையில்லாத மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிப்பணியிடங்களில் கேங்மேன் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story