திருப்பத்தூரை சேர்ந்த வாலிபரிடம், அட்சய பாத்திரம் எனக்கூறி ரூ.2 கோடி மோசடி செய்த 8 பேர் கைது - ரூ.1¼ கோடி, 2 கார்கள் பறிமுதல்


திருப்பத்தூரை சேர்ந்த வாலிபரிடம், அட்சய பாத்திரம் எனக்கூறி ரூ.2 கோடி மோசடி செய்த 8 பேர் கைது - ரூ.1¼ கோடி, 2 கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Feb 2020 4:00 AM IST (Updated: 12 Feb 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

அட்சய பாத்திரம் என்று கூறி திருப்பத்தூர் வாலிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1¼ கோடி மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சித்தூர்,

திருப்பத்தூரை சேர்ந்தவர் நவீன்குமார். இவரிடம் சிலர் புதையலை கண்டுபிடிக்கக் கூடிய அட்சய பாத்திரம் தங்களிடம் இருப்பதாகக்கூறி பேட்டரியால் செய்யப்பட்ட மின்விளக்குகளை கொடுத்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி ரூ.2 கோடியே 10 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நவீன்குமார் குடிபள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் குடிப்பள்ளி ரெயில்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அதன்பின்னால் மற்றொரு காரும், அதற்கு பின்னால் ஒரு மோட்டார்சைக்கிளும் வந்து கொண்டிருந்தது. அந்த இரண்டு கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிளையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீசாரை பார்த்தவுடன் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். போலீசார் மடக்கிப் பிடித்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் அட்சய பாத்திரம் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியை சேர்ந்த மகாதேவா (வயது 42), சிக்பல்லாபூர் பகுதியை சேர்ந்த கங்காதர் (30), பங்காருபேட்டையை அடுத்த காமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (19), பெங்களூரு மாரியம்மன் தெரு பகுதியை சேர்ந்த தனசேகர் (35), கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரா (40), வேப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர் (28), சித்தூர் மாவட்டம் கொதபள்ளி கிராமத்தை சேர்ந்த சீனப்பா (35), காஞ்சீபுரம் மாவட்டம் ராஜகுளம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் (35) என்பதும் தெரிந்தது.

மகாதேவா என்பவரிடமிருந்து ரூ.8 லட்சத்து 95 ஆயிரம், கங்காதரிடமிருந்து ரூ.10 லட்சம், ராமச்சந்திராவிடமிருந்து ரூ.50 ஆயிரம், சிவகுமாரிடமிருந்து ரூ.10 லட்சம், சீனப்பாவிடமிருந்து ரூ.25 லட்சம், தனசேகரிடமிருந்து ரூ.50 ஆயிரம், விநாயகத்திடமிருந்து ரூ.50 ஆயிரம், சேகரிடமிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மகாதேவா, குடிப்பள்ளி பகுதியில் தங்கியிருக்கும் ஓட்டலின் பின்புறத்தில் பிளாஸ்டிக் கவரில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த ரூ.75 லட்சத்து 40 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 2 கார்கள், ஒரு மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வேலூரை சேர்ந்த ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். அவரை 3 தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிபுல்லா கூறியதாவது:-

திருப்பத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரிடம் சென்று இவர்கள் 9 பேரும் அட்சயபாத்திரம் இருப்பதாக தெரிவித்து அவருக்கு ஆசை வார்த்தை கூறி இந்த அட்சய பாத்திரம் இருந்தால் பூமிக்கு அடியில் இருக்கும் தங்க புதையல்களை மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம் எனக் கூறி, ஒரு பாக்ஸை தயார் செய்து அதில் பேட்டரியால் செய்யப்பட்ட மின்விளக்குகளை அமைத்து அதை அட்சயபாத்திரம் என்று கூறி ஏமாற்றி உள்ளார்கள்.

இதற்காக அவர்கள் கேட்ட ரூ.2 கோடியே 10 லட்சத்தை நவீன்குமார் கொடுத்துள்ளார். பின்னர் அவர் அந்த அட்சய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தங்க புதையல் இருக்கும் இடத்தை தேடி உள்ளார். ஆனால் இவர்கள் வழங்கிய அட்சய பாத்திரம் புதையலை தேடித் தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்து குடிப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது இன்ஸ்பெக்டர்கள் கிரு‌‌ஷ்ணமோகன், ராமகிரு‌‌ஷ்ணாசாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரசாத் ராவ், முரளி மோகன் உள்பட போலீசார் உடனிருந்தனர். குற்றவாளிகளை பிடித்த போலீசாரை துணைபோலீஸ் சூப்பிரண்டு ஹரிபுல்லா பாராட்டினார்.

Next Story