அரசு பஸ்களில் இலவசமாக ஏற்றி செல்லாததால் மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை, பி.எல்.செட், வடகவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கொடைக்கானல் நகர் மற்றும் பெருமாள்மலை பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.
கொடைக்கானல்,
கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பல்வேறு பஸ்கள் இந்த வழித்தடத்தில், இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த பஸ்களில் மாணவ-மாணவிகளை இலவசமாக ஏற்றி செல்வதில்லை. அவர்கள் பணம் கொடுத்து பிரயாணம் செய்வதாக கூறப்படுகிறது.
எனவே கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்களில் தங்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று காலை சமூக ஆர்வலர் மகேந்திரன் தலைமையில் மாணவ-மாணவிகள் கொடைக்கானல் பஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்சின் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். பின்னர் அவர், அனைத்து அரசு பஸ்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story