திருச்சி-திருப்பைஞ்சீலி இடையே அடிக்கடி பழுதாகும் அரசு பஸ் நடுவழியில் பயணிகள் அவதி


திருச்சி-திருப்பைஞ்சீலி இடையே அடிக்கடி பழுதாகும் அரசு பஸ் நடுவழியில் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 13 Feb 2020 4:00 AM IST (Updated: 13 Feb 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-திருப்பைஞ்சீலி இடையே அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்சால் நடுவழியில் மாற்று பஸ்சுக்காக காத்திருந்து பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சமயபுரம்,

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருப்பைஞ்சீலிக்கு தினமும் அரசு பஸ் ஒன்று வந்து செல்கின்றது. இந்த பஸ்சில் திருப்பைஞ்சீலியிலிருந்து திருச்சிக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்று 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

இந்த பஸ் திருப்பைஞ்சீலியிலிருந்து மண்ணச்சநல்லூர்,நொச்சியம், டோல்கேட், திருவானைக்கோவில், சத்திரம் பஸ் நிலையம், மார்க்கெட், பாலக்கரை வழியாக மத்திய பஸ் நிலையம் வரை செல்கிறது.

இந்தநிலையில் இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுகிறது. இதன் காரணமாக தாங்கள் பயணம் செய்யும் பஸ் எங்கு பழுதாகி நின்று விடுமோ என்ற அச்சத்திலேயே தினமும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

வழக்கம்போல் திருப்பைஞ்சீலியிலிருந்து திருச்சிக்கு நேற்று காலை இந்த பஸ் புறப்பட்டது. உத்தமர்கோவில் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் டயரிலிருந்து ஒரு விதமான துர்நாற்றத்துடன் புகை வந்தது.

இதை கவனித்த டிரைவர் பஸ்சை சாமர்த்தியமாக பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தினார். உடனே பஸ் பழுதாகி விட்டதாக கூறி, டிரைவரும், கண்டக்டரும் பயணிகளை நடுவழியில் கீழே இறக்கிவிட்டனர்.

பின்னர் அந்த வழியாக வந்த அரசு பஸ்களில் மாணவ-மாணவிகள் மற்றும் சிலர் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பலர் அலுவலகத்துக்கு நேரமானதால், தனியார் பஸ்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்ய குறிப்பிட்ட அளவே பணம் கொண்டு வந்த தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அடுத்த பஸ்சில் செல்ல டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதால் நீண்ட நேரம் காத்திருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபோன்று அடிக்கடி பழுதடையும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இந்த வழித்தடத்தில் விட வேண்டும் என்றும், அதுவரை பழைய பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story