டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி


டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2020 11:00 PM GMT (Updated: 13 Feb 2020 5:44 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று வடலூரில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

குறிஞ்சிப்பாடி,

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வடலூரில் நடைபெற்றது. இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு இளைஞரணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் முதன் முதலாக இளைஞரணி கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து இளைஞர்களும் கடுமையாக உழைத்து கட்சி பணியாற்ற வேண்டும்.

சென்னையில் அன்பகம் என்னும் கட்சி அலுவலகத்துக்கு இளைஞரணி அல்லது தொ.மு.ச. இவற்றில் யார் அதிக நிதி திரட்டுகிறார்களோ, அவர்களுக்கு அந்த அன்பகம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். அப்போது இளைஞரணி செயலாளராக இருந்த மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கு ரூ.11 லட்சம் வசூல் செய்து கொடுத்தார். அதுபோல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் பொதுமக்கள் ஒத்துழைப்போடு 2 கோடிக்கு மேலானவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 30 லட்சம் இளைஞர்களை இளைஞரணியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்களை சேர்த்து வருகின்றனர். அந்த பணி 70 சதவீதம் முடிவடைந்து விட்டது. கொள்கை பிடிப்புள்ள சரியான இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும், இளைஞரணி தான் முதலில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 70 சதவீத உள்ளாட்சி பிரதிநிதிகள் தி.மு.க.வில் வெற்றி பெற்றுள்ளனர். அதுபோல் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜ.க. அரசை தூக்கி எறிந்து தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக அரியணையில் அமர செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகே‌‌ஷ் பொய்யாமொழி, துணை செயலாளர் சேகர், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமே‌‌ஷ், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. துரை கி.சரவணன், எம்.ஆர்.கே. கல்லூரி சேர்மன் கதிரவன், கடலூர் மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், முத்துசாமி, தங்க ஆனந்தன், திருமாவளவன், காசிராஜன், சபாநாயகம், கடலூர் நகர செயலாளர் ராஜா, குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் செங்கல்வராயன், மாவட்ட பிரதிநிதி எஸ்.பி. கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பாலமுருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பல்வேறு கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. இதில் கடலூர் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தனர். இதையடுத்து அவர்களை மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று சால்வை அணிவித்தார்.

அதனை தொடர்ந்து வடலூரில் கடலூர் மாவட்ட இளைஞரணி சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. இளைஞர் அணியில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை முதன்முதலில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளோம். இதுபோல் படிப்படியாக தமிழகம் முழுவதும் வழங்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெறுகிறது. அதனை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சி.பி.ஐ.க்கு மாற்றினால்தான் உண்மை குற்றவாளிகள் தெரியவருவர். அதுதான் என்னுடைய கருத்தும். மாநில அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக காவிரி டெல்டாவை அறிவித்துள்ளது. இது வெற்று அறிவிப்பு. தமிழக அரசு மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது. மக்களுக்கு பாதகமான எந்த திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என தி.மு.க. தலைவர் கூறியிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story