தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
சாதி பிரச்சினையை தூண்டிவிட்டு ஆதாயம் தேட முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் யூனியன் பட்டாடைகட்டி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் நேற்று மதியம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் ஒரு கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனாவிடம் கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எங்களது ஊரில் சாதி பிரச்சினை இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்ததை தொடர்ந்து பஞ்சாயத்து உதவியாளர் மாற்றப்பட்டு உள்ளார். இதுவரை இந்த பஞ்சாயத்தில் 25 ஆண்டுகளாக பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பஞ்சாயத்து உதவியாளர்கள் வந்துள்ளார்கள். இங்கு இதுவரை எவ்வித சாதி பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை. இந்த புகாரை அனுப்பியவர்கள் தனிபட்ட முறையில் சாதி பிரச்சினையை மேற்கோள்காட்டி தவறான தகவலை தந்துள்ளார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தட்டான்குளத்தில் பஞ்சாயத்து அலுவலகம் அரசால் திறக்கப்பட்டது. அதுவும் பஞ்சாயத்து உதவியாளர் வந்த பிறகுதான் நடைபெற்றது என்று சுயலாபத்திற்காக தவறான புகார் கொடுத்துள்ளனர். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி சுயநலத்திற்காக சாதி பிரச்சினையை தூண்டிவிட்டு ஆதாயம் தேட முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பஞ்சாயத்து செயலாளரை நியமனம் செய்ய கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story