ஜெயங்கொண்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மல்லிகா, வீராச்சாமி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் மகாராஜன், மாவட்ட பொருளாளர் இளவரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் ஜெயங்கொண்டம் வெங்கடாசலம், ஆண்டிமடம் பரமசிவம், தா.பழூர் ராதாகிருஷ்ணன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, மாதர் சங்க ஒன்றிய துணை செயலாளர் பல்கீஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகின்ற விலை கிடைக்காமல் தொடர்ந்து விவசாயத்தில் நஷ்டம் அடைந்து கடன்தாரர்களாக மாறி வருகின்றனர்.
பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் கடனை ஒரு முறை தள்ளுபடி செய்து விவசாயிகளை கடன் வலையில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும். கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடுகள் மற்றும் பட்ஜெட்டில் உரத்திற்கான மானியத்தை ரூ.77,886 கோடியில் இருந்து ரூ.70,139 கோடியாக குறைத்துள்ளதை கண்டிக்கிறோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மக்களிடம் கருத்து கேட்க அவசியம் இல்லை என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். 60 வயது முடிந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை உடனடியாக வழங்க வேண்டும்.
ஜெயங்கொண்டம் மகிமைபுரம் சி.எஸ்.ஐ. நிறுவனத்திடம் உள்ள 365 ஏக்கர் நிலத்தை மீட்டு இருளர் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். முந்திரி விவசாயிகளுக்கு பெடல் மெஷின், உரம், பூச்சிமருந்து போன்றவைகளை அரசு மானிய விலையில் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story